பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை வழக்கு: சிறப்பு டி.ஜி.பி. 1-ந்தேதி ஆஜராகாவிட்டால் பிடிவாரண்டு பிறப்பிக்கப்படும் விழுப்புரம் நீதிமன்றம் எச்சரிக்கை


பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை வழக்கு: சிறப்பு டி.ஜி.பி. 1-ந்தேதி ஆஜராகாவிட்டால் பிடிவாரண்டு பிறப்பிக்கப்படும் விழுப்புரம் நீதிமன்றம் எச்சரிக்கை
x
தினத்தந்தி 29 Oct 2021 9:34 PM IST (Updated: 29 Oct 2021 9:34 PM IST)
t-max-icont-min-icon

பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிறப்பு டி.ஜி.பி. 1-ந் தேதி ஆஜராகாவிட்டால் பிடிவாரண்டு பிறப்பிக்கப்படும் என்று விழுப்புரம் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

விழுப்புரம், 

பாலியல் புகார்

பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின்பேரில் சிறப்பி டி.ஜி.பி. பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும் இது தொடர்பான புகாரின்படி சிறப்பு டி.ஜி.பி. மற்றும் அவரது உத்தரவின்படி பெண் ஐ.பி.எஸ். அதிகாரியை மிரட்டி கார் சாவியை பறித்த செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் மீது விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 
இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. 

முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு ஆஜர்

இந்த நிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு ஆஜரானார். சிறப்பு டி.ஜி.பி. ஆஜராகவில்லை. அவர் சார்பில் ஆஜரான வக்கீல், இவ்வழக்கை வேறு கோர்ட்டுக்கு மாற்றக்கோரி சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய உள்ளதால் 2 வாரம் கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும், எனவே இவ்வழக்கை 2 வாரம் ஒத்திவைக்கும்படியும் கேட்டுக்கொண்டு அதற்கான மனுதாக்கல் செய்தார்.

சிறப்பு டி.ஜி.பி. ஆஜராகாவிட்டால் பிடிவாரண்டு 

அதற்கு அரசு தரப்பு வக்கீல் வைத்தியநாதன், கடும் ஆட்சேபனை தெரிவித்ததோடு இவ்வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் 3 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதால் விழுப்புரம் கோர்ட்டில் இவ்வழக்கை விசாரிக்க எந்த தடையும் இல்லை என்று கூறி வாதாடினார். 
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி கோபிநாதன், 90 நாட்களில் இவ்வழக்கை முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் 15 நாட்கள் கால அவகாசம் எப்படி வழங்க முடியும் என்றும் அப்படி வழங்கினால் மீதமுள்ள 75 நாட்களில் எப்படி வழக்கு விசாரணையை நடத்தி முடிக்க முடியும் என்று கேள்வி எழுப்பியதோடு சிறப்பு டி.ஜி.பி. தரப்பு கோரிக்கையை ஏற்க மறுத்தார்.
மேலும் இவ்வழக்கின் விசாரணையை வருகிற 1-ந் தேதிக்கு (திங்கட்கிழமை) நீதிபதி கோபிநாதன் ஒத்திவைத்ததோடு, அன்றைய தினம் சிறப்பு டி.ஜி.பி. கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்றும், ஆஜராகாவிட்டால் பிடிவாரண்டு பிறப்பிக்க நேரிடும் என்றும் கூறினார்.

Next Story