ஆத்தூர் ஊராட்சி அலுவலகம் முற்றுகை


ஆத்தூர் ஊராட்சி அலுவலகம் முற்றுகை
x
தினத்தந்தி 29 Oct 2021 10:15 PM IST (Updated: 29 Oct 2021 10:15 PM IST)
t-max-icont-min-icon

100 நாள் திட்ட பணியாளர்கள் வேலை கேட்டு ஆத்தூர் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

திண்டுக்கல் : 

திண்டுக்கல் மாவட்டம்  ஆத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட அக்கரைப்பட்டியில் 100 நாள் வேலைக்கு 4 குழுக்களாக பணியாளர்கள் பிரிக்கப்பட்டுள்ளனர். வாரம் ஒரு குழுவுக்கு வேலை வழங்கப்பட்டு வருகிறது. இதில் அனைத்து குழுக்களுக்கும் மாதம் முழுவதும் வேலை வழங்க வேண்டும் என்று பணியாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். 

இந்த நிலையில் நேற்று 100 நாள் திட்டத்தில் வேலை செய்யும் பணியாளர்கள் 85 பேர் பணிக்கு வந்தனர். மழை பெய்வதால் அவர்களுக்கு வேலை இல்லை என்று பணிதள பொறுப்பாளர் கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பணியாளர்கள் தங்களுக்கு வேலை கேட்டு ஆத்தூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர். 


அவர்களிடம் ஊராட்சி செயலர் மணவாளன் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஹேமலதா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் சமரசம் ஆகாததால் அவர்கள் ஆத்தூர் தாலுகா அலுவலகம் சென்று வேலை வழங்கும்படி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடனே ஊராட்சி செயலர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அங்கு சென்று அவர்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் வேலை வழங்குவதாக அதிகாரிகள் கூறியதை தொடர்ந்து பணியாளர்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.  

Next Story