மாணவ-மாணவிகளுக்கு ஆர்வமூட்டும் வகையில் கற்பிக்க வேண்டும்


மாணவ-மாணவிகளுக்கு ஆர்வமூட்டும் வகையில் கற்பிக்க வேண்டும்
x
தினத்தந்தி 29 Oct 2021 10:35 PM IST (Updated: 29 Oct 2021 10:35 PM IST)
t-max-icont-min-icon

1 முதல் 8-ம் வகுப்பு வரை நாளை மறுநாள் பள்ளிகள் திறப்பதையொட்டி நடந்த ஆலோசனை கூட்டத்தில், மாணவ-மாணவிகளுக்கு ஆர்வமூட்டும் வகையில் கற்பிக்க வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

திண்டுக்கல்: 

தமிழகத்தில் கொரோனா பரவல் கடந்த 1½ ஆண்டுகளாக பள்ளிகள் மூடிக்கிடந்தன. இந்த நிலையில் மாநிலம் முழுவதும் கொரோனா தொற்று வெகுவாக குறைந்து விட்டது.

இதனால் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் பள்ளிகள் திறக்கப்படுகிறது. இதையொட்டி அரசு மற்றும் தனியார் தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகளை பராமரிக்கும் பணி தீவிரமாக நடக்கிறது. இந்த நிலையில் பள்ளிகளை திறப்பது தொடர்பாக பள்ளி கல்வித்துறை சார்பில் திண்டுக்கல்லில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் திண்டுக்கல் கல்வி மாவட்டத்தில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்துக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கருப்புசாமி தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி அலுவலர் மாரிமீனாள் முன்னிலை வகித்தார். இதில் பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் ஜெயக்குமார் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
அப்போது பள்ளி கட்டிடங்களை பராமரித்து, வகுப்பறைகளை சுத்தமாக வைக்க வேண்டும். மாணவ-மாணவிகளை சுழற்சி முறையில் பள்ளிக்கு வரவழைக்க வேண்டும். மேலும் அவர்களுக்கு கைகளை சுத்தம் செய்ய கிருமிநாசினி வழங்கி, சமூக இடைவெளியில் அமர வைக்க வேண்டும். முககவசம் கட்டாயம் அணிந்து இருக்க வேண்டும். 

அதேநேரம் 1½ ஆண்டுகளுக்கு மேலாக மாணவர்கள் வீட்டிலேயே இருந்ததால், பள்ளிக்கு வருவதற்கு ஆர்வத்தை தூண்ட வேண்டும். பாடங்களை நடத்துவதற்கு முன்பு புத்தாக்க வகுப்பு நடத்த வேண்டும். மாணவர்கள் ஆர்வம் மற்றும் உற்சாகமாக கற்கும் வகையில் பாடங்களை கற்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.


Next Story