வேலூர் மாநகராட்சியில் தூர்வாரப்படாத கால்வாய்கள், குண்டும் குழியுமான சாலைகள்
வேலூர் மாநகராட்சியில் தூர்வாரப்படாத கால்வாய்கள், குண்டும் குழியுமான சாலைகளால் பொதுமக்கள் மாநகராட்சி நிர்வாகம் மீது அதிருப்தி அடைந்துள்ளனர்.
வேலூர்
வேலூர் மாநகராட்சியில் தூர்வாரப்படாத கால்வாய்கள், குண்டும் குழியுமான சாலைகளால் பொதுமக்கள் மாநகராட்சி நிர்வாகம் மீது அதிருப்தி அடைந்துள்ளனர்.
புகார் மனுக்கள்
வேலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. மழையினால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த பணி ஆமை வேகத்தில் நடப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
மாநகராட்சியில் சிறு மழை பெய்தாலே மக்கள் அவதிக்குள்ளாகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. தெருக்கள் எல்லாம் சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. அவசர காலத்தில் கூட வீட்டை விட்டு வெளியே வரமுடியாத சூழல் உள்ளது. எங்கு பார்த்தாலும் சாலைகள் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் மனுக்கள் மாநகராட்சி அலுவலகத்தில் குவிகிறது. அவற்றை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை என்று கூறுவதை விட பொருட்படுத்தவில்லை என்றே கூறலாம் என சமூகஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். புகார் அளித்து, அளித்து மக்கள் சோர்வடைந்து விட்டனர். மாநகராட்சி நிர்வாகம் மீது மக்கள் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
வியாபாரிகள் பாதிப்பு
மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பல்வேறு அமைப்பினர் போர்க்கொடி தூக்கி உள்ளனர். சாலைகளை சரிசெய்ய வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாநகராட்சியில் முக்கிய வணிகதலமாக திகழும் மண்டித்தெரு, கிருபானந்தவாரியார் சாலை, காந்திரோடு, சைதாப்பேட்டை பகுதிகள் முழுவதும் தெருக்கள் தோண்டப்பட்டு எங்கு பார்த்தாலும் மண் மேடுகள் காணப்படுகிறது. தற்போது தீபாவளி என்பதால் வணிகர்களுக்கு வியாபாரம் இல்லை.
இதனால் வேலூரில் பலகோடி ரூபாய்க்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான கடைகளுக்கு செல்லும் பாதை மிகவும் மோசகமாக உள்ளதால் அந்த கடைகளில் வியாபாரம் சுத்தமாக இல்லை. அவர்கள் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றனர். சாலைகளை சீரமைக்கக்கோரி வியாபாரிகள் கோரிக்கை வைத்தும் மாநகராட்சி செவிசாய்க்கவில்லை. அதிகாரிகளிடையே ஒற்றுமை இல்லை என்ற புகாரும் எழுந்துள்ளது.
கால்வாய்களில் அடைப்பு
அத்துடன், மாநகராட்சி பகுதிகள் முழுவதிலும் உள்ள கால்வாய்கள் தூர்ந்து போய் காணப்படுகிறது. கால்வாயில் குப்பைகள் நிறைந்து பல்வேறு இடங்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தேங்கி காணப்படும் கழிவுநீரில் துர்நாற்றம் வீசுகிறது. டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவும் அபாயமும் உள்ளது.
சாலை வசதி, கால்வாய் வசதி போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ள வேலூருக்கு மாநகராட்சி அந்தஸ்து கொடுத்திக்காமேலேயே இருந்திருக்கலாம் என்ற விமர்சனம் எழுந்துள்ளது. மக்களின் பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்படுமா? என்ற கேள்வி அனைத்து தரப்பினரிடையே எழுந்துள்ளது. இதற்கு மாநகராட்சி நிர்வாகம் தான் பதில் கூறவேண்டும்.
Related Tags :
Next Story