திருநங்கைகளுக்கு அடையாள அட்டை பெற ஏற்பாடு


திருநங்கைகளுக்கு அடையாள அட்டை பெற ஏற்பாடு
x
தினத்தந்தி 29 Oct 2021 10:54 PM IST (Updated: 29 Oct 2021 10:54 PM IST)
t-max-icont-min-icon

திருநங்கைகள் தகுதியுடையவர்களாக இருந்தால் அவர்களுக்கு அடையாள அட்டை பெற ஏற்பாடு செய்யப்படும் என்று திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன் கூறினார்.

திருப்பூர்
திருநங்கைகள் தகுதியுடையவர்களாக இருந்தால் அவர்களுக்கு அடையாள அட்டை பெற ஏற்பாடு செய்யப்படும் என்று திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன் கூறினார்.
விழிப்புணர்வு நிகழ்ச்சி
தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வெள்ளிவிழா ஆண்டையொட்டி திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் திருப்பூர் மாவட்ட நீதிமன்ற பாலின உணர்திறன் குழு சார்பில் திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் பற்றிய புரிதல் விழிப்புணர்வு நிகழ்ச்சி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
குற்றவியல் நீதித்துறை நடுவர் உதயசூரியா வரவேற்றார். இலவச சட்ட உதவிகள் குறித்து வக்கீல் அழகர் சரவணன் பேசினார். திருநங்கைகளுக்கான அமைப்பு நிறங்கள் தொண்டு நிறுவனத்தின் துணை நிறுவனர் சிவக்குமார் பேசும்போது திருநங்கைகள் அனைவருக்கும் அடையாள அட்டை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்றார்.
அடையாள அட்டை
விழாவுக்கு தலைமை தாங்கி முதன்மை மாவட்ட நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன் பேசியதாவது:-தேசிய சட்டப்பணிகள் ஆணையக்குழு மூலமாகத்தான், மாற்றுப்பாலினத்தவர்களுக்கு மூன்றாம் பாலினம் என்கிற அடையாளத்தை சுப்ரீம் கோர்ட்டு மூலம் பெற்றுக்கொடுத்தது. மாற்றுப்பாலினத்தவர்களின் சமூக இடர்பாடுகளையும், பொருளாதார ரீதியான சவால்களையும் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள முடிகிறது. மாற்றுப்பாலித்தனவர்களுக்கு அடையாள அட்டை பெறுவதற்கு தகுதியுடைய அனைவரும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம். 
வீட்டுவசதி வாரியம், வங்கி அதிகாரிகளுடன் பேசி வீட்டுவசதி செய்து கொடுக்கப்படும். ஹார்மோன் சிகிச்சை உள்பட பல்வேறு மருத்துவ பரிசோதனைகளுக்கு திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறை மூலம் முகாம்கள் அமைக்க பரிசீலனை செய்யப்பட்டுள்ளது. மாற்றுப்பாலினத்தவர்களுக்கான உரிமைகளை பெற்று தருவதில் திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, அரசுத்துறையுடன் இணைந்து செயல்பட தயாராக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் திருப்பூர் மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி சுகந்தி, திருப்பூர் மாவட்ட நீதிமன்ற பாலின உணர்திறன் குழுவின் தலைவர் மற்றும் 2-வது கூடுதல் மாவட்ட நீதிபதி அனுராதா, திருநங்கைகள், திருநம்பிகள், காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story