காதல் விவகாரத்தில் வாலிபரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி உறவினர்கள் மறியல்


காதல் விவகாரத்தில் வாலிபரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி உறவினர்கள் மறியல்
x
தினத்தந்தி 29 Oct 2021 11:27 PM IST (Updated: 29 Oct 2021 11:27 PM IST)
t-max-icont-min-icon

வேலூரில் காதல் விவகாரத்தில் வாலிபரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி உறவினர்கள் நேற்று சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர்

வேலூரில் காதல் விவகாரத்தில் வாலிபரை  தாக்கியவர்களை கைது செய்யக்கோரி உறவினர்கள் நேற்று சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வாலிபர்மீது தாக்குதல்

வேலூர் சாய்நாதபுரத்தை சேர்ந்த 17 வயது வாலிபரும், 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயதுடைய மாணவியும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த காதல் விவகாரத்தில் மாணவியின் தரப்பினர் அந்த வாலிபரை பிடித்து சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த அந்தவாலிபர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவர் சுயநினைவின்றி சிகிச்சை பெற்று வருகிறார்.

சாலைமறியல்

இதுதொடர்பாக அந்த வாலிபரின் தந்தை வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மகனை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்திருந்தார்.
இந்த நிலையில் நேற்று சங்கரன்பாளையத்தில் வாலிபரின் உறவினர்கள் ஆரணி சாலையில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. முக்கிய சாலை என்பதால் நீண்டவரிசையில் வாகனங்கள் நின்றது. தகவல் அறிந்ததும் பாகாயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபா, வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

கைது செய்ய வேண்டும்

அப்போது அவர்கள், வாலிபரை தாக்கிய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். தாக்கியவர்கள் பெயர் விவரம் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். தொடர் பேச்சுவார்த்தைக்கு பின்னர் அவர்கள் மறியலை கைவிட்டனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story