வேலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி இலக்கினை நிறைவேற்றும் பஞ்சாயத்துகளுக்கு சிறப்பு பரிசு
வேலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் இலக்கினை நிறைவேற்றும் பஞ்சாயத்துகளுக்கு சிறப்பு பரிசாக பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும் என கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்தார்.
காட்பாடி
வேலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் இலக்கினை நிறைவேற்றும் பஞ்சாயத்துகளுக்கு சிறப்பு பரிசாக பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும் என கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்தார்.
சிறப்பு முகாம்
காட்பாடி தாலுகா கார்ணாம்பட்டு, அரும்பருத்தி கிராமங்களுக்கான, கிராம அளவில் பட்டா தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் சிறப்புமுகாம் அரும்பருத்தி கிராமத்தில் நடந்தது. வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கி, கடந்த மாதம் மழையின் காரணமாக சுவர் இடிந்து விழுந்து இறந்தவரின் குடும்ப வாரிசான அம்மு என்ற லாவண்யாவுக்கு ரூ.4 லட்சத்துக்கான காசோலையும், மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு ரூ.65 லட்சத்துக்கான வங்கிக் கடனுதவிகளையும் வழங்கினார்.
மேலும் 15 பேருக்கு இலவச வீட்டு மனைபட்டா, 10 பேருக்கு பட்டா பெயர் மாற்றம், 5 பேருக்கு பட்டா உட்பிரிவு பெயர் மாற்றம், 10 பேருக்கு முதியோர் உதவித்தொகை ஆகியவற்றை வழங்கி பேசினார்.
சிறப்பு பரிசு
அப்போது வேலூர் மாவட்டத்தில் புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் அரசு அலுவலர்களுடன் இணைந்து மாவட்ட நிர்வாகம் நிர்ணயித்துள்ள கொரோனா தடுப்பூசி செலுத்தும் இலக்கினை நிறைவேற்றும் பஞ்சாயத்துகளுக்கு சிறப்பு பரிசாக பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும் என்றார். பின்னர் அந்த பகுதியில் நடந்த கொரோனோ தடுப்பூசி சிறப்பு முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் (பயிற்சி) ஐஸ்வர்யா, காட்பாடி தாசில்தார் ஜெகதீஸ்வரன், மண்டல துணை தாசில்தார் ஜெயபிரகாஷ், வருவாய் ஆய்வாளர் தீனதயாளன், காட்பாடி ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் வேல்முருகன், துணைத் தலைவர் சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
குடியாத்தம்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம் சீவூர் ஊராட்சியில் நடந்த முகாமிற்கு குடியாத்தம் உதவி கலெக்டர் தனஞ்செயன் தலைமை தாங்கினார். தாசில்தார் லலிதா, குடியாத்தம் ஒன்றியக்குழு தலைவர் என்.இ.சத்யானந்தம், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் லலிதாலிங்கம், தீபிகாபரத், ஊராட்சி மன்ற தலைவர் உமாபதி, துணைத்தலைவர் அஜீஸ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கிராம நிர்வாக அலுவலர் உஷா வரவேற்றார்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன், பயிற்சி கலெக்டர் ஐஸ்வர்யா, குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலுவிஜயன் ஆகியோர் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு பட்டா திருத்த சான்றிதழ்களை வழங்கினார்கள். அரசு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
அணைக்கட்டு
அணைக்கட்டு மற்றும் ஒடுகத்தூரிலும் சிறப்பு முகாம் நடந்தது. நிகழ்ச்சிக்கு கலால் உதவி ஆணையர் வெங்கட்ராமன், மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் வாணி லட்சுமி ஜெகதாம்பாள் ஆகியோர் தலைமை தாங்கினர். அணைக்கட்டு தாசில்தார் பழனி, வேலூர் மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் பாபு, அணைக்கட்டு ஒன்றிய குழு தலைவர் சி.பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மண்டல துணை தாசில்தார் பழனி வரவேற்று பேசினார்.
அணைக்கட்டு மற்றும் அப்புகல் பகுதியை சேர்ந்த விவசாயிகளிடத்திலிருந்து 27 மனுக்கள் பெறப்பட்டு 19 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. ஒடுகத்தூரில் 200-க்கும் மேற்பட்டோர் பட்டா பிரச்சினை தொடர்பாக மனுக்களை அளித்தனர். 50-க்கும் மேற்பட்டோருக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. அணைக்கட்டு தேர்தல் தாசில்தார் சாந்தி, வருவாய் ஆய்வாளர்கள் சுகந்தி, நந்தகுமார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கே.வி.குப்பம்
கே.வி.குப்பம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடந்த முகாமிற்கு தாசில்தார் சரண்யா தலைமை தாங்கினார். ஒன்றியக் குழு தலைவர் எல்.ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவி புஷ்பலதா சரவணன் வரவேற்றார். மாவட்ட வழங்கல் அலுவலர் காமராஜ் தொடங்கி வைத்தார்.
முகாமை வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து சந்தைமேட்டில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமை பார்வையிட்டு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். துணை தாசில்தார் பலராமன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இ.கோபி, பா.கலைச்செல்வி, வருவாய் ஆய்வாளர் மணிமேகலை, கிராம நிர்வாக அலுவலர் குமரன், வருவாய்த்துறையினர், நெடுஞ்சாலைத் துறையினர் கலந்து கொண்டனர்.
அடுக்கம்பாறை
கணியம்பாடி உள் வட்டத்திற்கு உட்பட்ட கணியம்பாடி, கனிகனியான் மற்றும் பாலாத்துவண்ணான் ஆகிய கிராமங்களுக்கான சிறப்பு முகாம் நேற்று நடந்தது. வேலூர் சப்-கலெக்டர் விஷ்ணு பிரியா தலைமை தாங்கினார். வேலூர் தாசில்தார் செந்தில், மண்டல துணை தாசில்தார் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கணியம்பாடி வருவாய் ஆய்வாளர் பொன்முருகன் வரவேற்றார். முகாமில் 21 மனுக்கள் பெறப்பட்டது. இதில் 11 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு சான்று வழங்கப்பட்டது. இதில் கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பேரணாம்பட்டு
பேரணாம்பட்டு தாலுகா பத்தலபல்லி கிராமத்தில் பட்டா தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காணும் சிறப்பு நடை பெற்றது. முகாமிற்கு வேலூர் தனித்துணை கலெக்டர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். குடியாத்தம் சப்-கலெக்டர் தனஞ்செயன் முன்னிலை வகித்தார். பேரணாம்பட்டு தாசில்தார் வெங்கடேசன் வரவேற்றார்.
குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலு முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் பொது மக்களிடமிருந்து 37 மனுக்கள் பெறப்பட்டு அவற்றில் 35 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. 2 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. முகாமில், மண்டல துணை தாசில்தார் வடிவேல், வருவாய் ஆய்வாளர் பஞ்சாட்சரம், தலைமை நில அளவையர் ஹரி கிருஷ்ணன், பத்தலப்பல்லி ஊராட்சி தலைவர் வசந்தா, மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், பொதுமக்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
Related Tags :
Next Story