வரலாற்று சிறப்புமிக்க கொழுமங்கொண்டான் கிராமம்
வரலாற்று சிறப்புமிக்க கொழுமங்கொண்டான் கிராமம்
பண்டைய மன்னர்கள் ஒரு நாட்டை, ஒரு பகுதியை வென்றால் அதன் நினைவாக அந்த இடத்தின் பெயரை தமக்கு பட்டப்பெயராக சூட்டிக்கொள்வது வழக்கமாக இருந்து வந்துள்ளது. அந்த பட்டப்பெயரில் ஒரு ஊரும் ஏற்படுத்தும் வழக்கமும் இருந்து வந்துள்ளது.
ராஜராஜசோழனின் மகன் ராஜேந்திர சோழன் வடநாட்டில் கங்கை வரை படையெடுத்து சென்று வெற்றி பெற்றதால் கங்கை கொண்டான் என்ற பட்டப்பெயரும், அந்த பெயரில் கங்கை கொண்ட சோழபுரம் என்ற ஊரும் உருவாக்கப்பட்டது. அதுபோல் திருப்பூர் மாவட்டத்தில் ஒரு ஊர் உள்ளது. அந்த ஊர் கொழுமங்கொண்டான் என்ற ஊராகும். உடுமலையில் இருந்து பழனி செல்லும் வழியில் தாழையம் என்ற பிரிவில் இருந்து வடக்கே 5 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த ஊர் உள்ளது.
திருப்பூர் உள்ளிட்ட கொங்குநாடு சேர நாட்டின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்தது. அந்த சேர நாட்டை கழுமலம் என்ற இடத்தை தலைநகராக கொண்டு கணைக்கால் இரும்பொறை என்ற சேர மன்னன் ஆண்டு வந்தான். அதே காலகட்டத்தில் சோழ நாட்டை செங்கணான் என்ற மன்னன் ஆண்டு வந்தான். இந்த இரு மன்னர்களும் பலமுறை போர் செய்து வந்துள்ளனர்.
திருப்பூர் கோவில்வழி என்ற பகுதியில் போர் புரிந்துள்ளனர். சோழ மன்னன் செங்கணான் படையெடுத்து வருகிறார் என்பதை அறிந்த கணைக்கால் இரும்பொறை எதிர்கொண்டு வெல்ல தலைநகர் கழுமலத்தில் இருந்து படையெடுத்து வந்தார். இருபடைகளும் கோவில்வழியில் சந்தித்து போர் செய்ததில் கணைக்கால் இரும்பொறை தோல்வியடைகிறார். இதைத்தொடர்ந்து கணைக்கால் இரும்பொறையை கைது செய்து கொடுவாய் கோட்டையில் சிறை வைக்கப்படுகிறார்.
சிறையில் சேரன் தாகத்திற்கு தண்ணீர் கேட்க சிறைக்காவலர்கள் கேலி செய்கிறார்கள். இந்த அவமானம் தாங்காமல் கணைக்கால் இரும்பொறை பாடல் ஒன்றை எழுதி வைத்து விட்டு சிறையிலேயே இறந்து போகிறார்.
இந்த பாடல் புறநானூற்றில் பதிவாகி உள்ளது. இவ்வாறு சேரனை வென்று அவனது தலைநகர் கழுமலத்தை வெற்றி கொண்டதால் சோழன் செங்கணானுக்கு கழுமலங்கொண்டான் என்ற பட்டம் சூட்டப்பட்டு அந்த பெயரில் ஒரு ஊர் ஏற்படுத்தப்பட்டது. இன்று அந்த ஊர் கழுமலங்கொண்டான் என்பது காலப்போக்கில் மருவி கொழுமங்கொண்டான் என்று அழைக்கப்படுகிறது.
அந்த ஊரில் பழமையான சிதிலமடைந்த கோவில்கள், அதற்கு மானியமாக சோழன் அளித்த பலநூறு ஏக்கர் நிலங்கள் உள்ளன. சேரனின் தலைநகரான கழுமலம் இன்று கொழுமம் என்று அழைக்கப்படுகிறது. உடுமலைக்கு தெற்கே அமராவதி ஆற்றங்கரையில் இருக்கிறது. அங்கு பழமையான சிவாலயமும், கோட்டை இருந்ததற்கான ஆதாரமாக கோட்டை மாரியம்மன் கோவிலும் இருக்கிறது.
-கவிஞர் சிவதாசன்,
திருப்பூர் வரலாற்று ஆய்வு மைய அமைப்பாளர்.
Related Tags :
Next Story