போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் ரூ.1½ லட்சம்-பரிசுப்பொருட்கள் சிக்கின
விருதுநகர் அருகே போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் ரூ.1½ லட்சம்-பரிசுப்பொருட்கள் சிக்கின
விருதுநகர்,
தீபாவளியையொட்டி அரசு அலுவலர்கள் மற்றும் போலீசார் தீபாவளி இனாம் மற்றும் பரிசு எதுவும் பெறக்கூடாது என அரசு உத்தரவிட்டு உள்ளது. இது பற்றி ஒவ்வொரு மாவட்டத்திலும் போலீசாருக்கு உரிய அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. இந்தநிலையில் விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு வச்சக்காரப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றும் கருப்பசாமி (வயது 58) தீபாவளி வசூல் செய்வதாக தகவல் கிடைத்ததன் பேரில் அவரை கண்காணித்து வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை அவர், போலீஸ் நிலையத்தில் இருந்து கன்னிசேரி ரோட்டில் காமராஜர்புரத்தில் அவர் தங்கியிருக்கும் வீட்டிற்கு சென்றபோது லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர்கள் பூமிநாதன், பாரதி, பிரியா ஆகியோர் அவரை ரகசியமாக பின்தொடர்ந்து சென்றனர்.
அவர் வீட்டிற்குள் நுழைந்தவுடன் லஞ்ச ஒழிப்பு போலீசாரும் வீட்டிற்குள் சென்றனர். லஞ்ச ஒழிப்பு போலீசாரை கண்டு கருப்பசாமி அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து கருப்பசாமியின் வீட்டில் திடீர் சோதனை நடத்தினர். சோதனையின் போது அவரது வீட்டில் ரூ. 1 லட்சத்து 49 ஆயிரம் இருந்தது. மேலும் அவரது பேண்ட்பையில் ரூ.4 ஆயிரம் இருந்தது. ஆக மொத்தம் ரூ.1 லட்சத்து 53 ஆயிரத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றினர். மேலும் வீட்டில் இருந்த தீபாவளி பட்டாசு, பரிசு பாக்கெட்டுகளையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றினர்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் கருப்பசாமியிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தியதில் அவரிடம் கைப்பற்றப்பட்ட பணம் தீபாவளி இனாம் வசூல் என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதற்காக உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் பரிந்துரை செய்துள்ளனர். லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கிய இன்ஸ்பெக்டர் கருப்பசாமி, தேனியை சேர்ந்தவர் ஆவர். கடந்த மார்ச் மாதம் திண்டுக்கல்லில் இருந்து விருதுநகர் வச்சக்காரப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு மாறுதல் ஆகி வந்துள்ளார். காமராஜர்புரத்தில் மாடி வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கிய நிலையில், அங்கு நேற்று நடந்த திடீர் சோதனையில் சிக்கினார். இது போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story