பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் திடீர் மரணம்


பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் திடீர் மரணம்
x
தினத்தந்தி 30 Oct 2021 2:25 AM IST (Updated: 30 Oct 2021 2:25 AM IST)
t-max-icont-min-icon

கன்னட திரைஉலகில் முன்னணி கதாநாயகனாக இருந்து வந்த நடிகர் புனித் ராஜ்குமார் திடீரென மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உள்பட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பெங்களூரு:
 
நடிகர் புனித் ராஜ்குமார்

  கன்னட திரைஉலகில் முடிசூடா மன்னனாக திகழ்ந்தவர் நடிகர் ராஜ்குமார். அவர் கடந்த 2000-ம் ஆண்டு சந்தன கடத்தல் வீரப்பனால் கடத்தப்பட்டார். கர்நாடகம் மற்றும் தமிழகம் சார்பில் அவருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்பட்டதை அடுத்து 108 நாட்கள் வன வாசத்திற்கு பிறகு ராஜ்குமார் விடுவிக்கப்பட்டார். அவருக்கு ராகவேந்திர ராஜ்குமார், சிவராஜ்குமார், புனித் ராஜ்குமார் ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர். மூன்று பேருமே கன்னட திரைஉலகில் முன்னணி நடிர்களாக உள்ளனர். அவர்களில் ராகவேந்திர ராஜ்குமார், உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக தீவிர நடிப்பில் இருந்து ஒதுங்கியே உள்ளார். சிவராஜ்குமார் மற்றும் புனித் ராஜ்குமார் ஆகிய 2 பேர் மட்டும் தொடர்ச்சியாக படங்களில் நடித்து வருகிறார்கள்.

  இவர்களில் நடிகர் புனித் ராஜ்குமார், பெங்களூரு சதாசிவநகரில் உள்ள தனது வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். அவரது மனைவி அஸ்வினி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். புனித் ராஜ்குமார், தினமும் காலையில் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று பயிற்சி மேற்கொள்வது வழக்கம். இதன் மூலம் அவர் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருந்தார்.

இதயம் செயல்படவில்லை

  வழக்கம் போல் புனித் ராஜ்குமார், நேற்று காலையில் வீட்டின் அருகில் உள்ள உடற்பயிற்சி கூடத்திற்கு வந்தார். அங்கு அவர் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்தார். உடனே அவரை நண்பர்கள் அருகில் உள்ள தனது குடும்ப டாக்டரிடம் அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது தெரியவந்தது. உடனடியாக அவரை கன்னிகாம் ரோட்டில் உள்ள விக்ரம் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு வரும்போது, அவரது இதயம் செயல்படாத நிலையில் இருந்தது.

  அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு டாக்டர்கள் குழு, புனித் ராஜ்குமாரின் இதயத்தை மீண்டும் செயல்பட வைக்க 3 மணி நேரம் தொடர்ந்து முயற்சி செய்தனர். ஆனால் இந்த முயற்சியால் எந்தவித பயனும் ஏற்படவில்லை. அவரது இதயம் மீண்டும் செயல்படவில்லை. அவர் காலை 11.40 மணியளவில் மரணம் அடைந்த தகவல் வெளியானது. இதையடுத்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உள்பட மந்திரிகள் நடிகர்கள் சிவராஜ்குமார், யஷ் உள்ளிட்டோரும் அந்த மருத்துவமனைக்கு நேரில் வந்தனர். அங்கு புனித் ராஜ்குமாரின் ரசிகர்கள் அதிக எண்ணிக்கையில் குவிந்தனர். பலர் கண்ணீர்விட்டு கதறி அழுதனர். ஒருமுறையாவது புனித்ராஜ்குமாரின் முகத்தை பார்க்க வேண்டும் கூறி கதறி அழுதனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. அதன் பிறகு புனித் ராஜ்குமார் மரணம் அடைந்துவிட்டதாக வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் மதியம் 2.30 மணிக்கு அதிகாரபூர்வமாக அறிவித்தார். இதனால் திரைஉலகினர், அரசியல் தலைவர்கள், புனித்ராஜ்குமாரின் ரசிகர்கள் மற்றும் கர்நாடக மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பலத்த பாதுகாப்பு

  அதைத்தொடர்ந்து புனித் ராஜ்குமாரின் உடல் மதியம் 2.30 மணியளவில் விக்ரம் மருத்துவமனை நிர்வாகம், அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தது. அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் அவரது உடல் சதாசிவநகரில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அவரது உடலை பார்த்து குடும்பத்தினர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். முன்னாள் பிரதமர் தேவேகவுடா, எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா உள்ளிட்ட தலைவர்கள் அங்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

  பிறகு மாலை 5 மணியளவில் அவரது உடல் கன்டீரவா விளையாட்டு மைதானத்திற்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு பொதுமக்கள், ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். கன்டீரவா விளையாட்டு மைதானத்தில், 500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 2 கூடுதல் கமிஷனர்கள் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் நோக்கத்தில் நகரம் முழுவதும் முக்கிய சந்திப்புகளில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தலைவர்கள் இரங்கல்

  புனித் ராஜ்குமார் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, முன்னாள் பிரதமர் தேவேகவுடா, முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா, எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, முன்னாள் முதல்-மந்திரிகள் குமாரசாமி, எஸ்.எம்.கிருஷ்ணா, மத்திய மந்திரி பிரகலாத்ஜோஷி, முன்னாள் மத்திய மந்திரி சதானந்தகவுடா, வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக், நீர்ப்பாசனத்துறை மந்திரி கோவிந்த் கார்ஜோள், வீட்டு வசதித்துறை மந்திரி சோமண்ணா, உயர்கல்வித்துறை மந்திரி அஸ்வத் நாராயண், தொழில்துறை மந்திரி முருகேஷ் நிரானி உள்பட மந்திரிகள் மற்றும் அரசியல் தலைவர்கள், கிரிக்கெட் வீரர்கள் அனில் கும்பிளே, சேவாக், ஹர்பஜன்சிங், வினய்குமார், வெங்கடேஷ் பிரசாத் மற்றும் கன்னட திரைஉலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதில் பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் புனித் ராஜ்குமாருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு இரங்கல் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

பள்ளி-கல்லூரிகள் மூடல்

புனித் ராஜ்குமார் மரணம் அடைந்த தகவல் பரவியதை அடுத்து பெரிய வணிக நிறுவனங்கள், கடைகள், திரையரங்குகள் மூடப்பட்டன. ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் என்ன செய்வது என்று கருதி, பெங்களூருவில் பள்ளி-கல்லூரிகளுக்கு மதியத்திற்கு பிறகு விடுமுறை விடப்பட்டது. தனியார் நிறுவனங்களும் மூடப்பட்டு, ஊழியர்கள் விரைவாக வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

Next Story