நடிகர் புனித் ராஜ்குமார் மரணம் எதிரொலி: பெங்களூருவில் கடைகள் அடைப்பு
நடிகர் புனித் ராஜ்குமார் மரணம் எதிரொலியாக பெங்களூருவில் நேற்று பெருரும்பாலான வியாபாரிகள் தாங்களாகவே முன்வந்து கடைகளை அடைத்தனர்.
பெங்களூரு:
கடைகள் அடைப்பு
கன்னட திரையுலகின் பிரபல நடிகராக இருந்த புனித் ராஜ்குமார் நேற்று மரணம் அடைந்தார். அவரது மரணத்தை பயன்படுத்தி சில சமூக விரோதிகள் அசம்பாவிதங்களில் ஈடுபட வாய்ப்புள்ளதாக போலீசார் கருதினார்கள். இதையடுத்து, அசம்பாவிதங்கள் நடைபெறுவதை தடுக்கும் விதமாக பெங்களூரு நகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
இதற்கிடையில், பெங்களூருவில் நேற்று பதற்றமான சூழ்நிலை நிலவியதால் வியாபாரிகள் தாங்களாகவே முன்வந்து கடைகளை அடைத்தார்கள்.
வணிக வளாகங்கள் மூடல்
மெஜஸ்டிக், சிக்பேட்டை, ராஜாஜிநகர், விஜயநகர், சதாசிவநகர் உள்ளிட்ட நகரில் பெரும்பாலான பகுதிகளில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது. வியாபாரிகள் தாங்களாகவே முன்வந்து கடைகளை அடைத்திருந்தார்கள்.குறிப்பாக மளிகை கடைகள், காய்கறி கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது. இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு மக்கள் சிரமத்திற்கு உள்ளானார்கள்.
அத்துடன் பெங்களூரு நகரில் உள்ள முக்கியமான வணிக வளாகங்களும் நேற்று மதியத்தில் இருந்து மூடப்பட்டது. புனித் ராஜ்குமாரின் மரணம் காரணமாக பெங்களூருவில் இன்றும் (சனிக்கிழமை) கடைகள், வணிக வளாகங்கள் அடைக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. நிலைமையை அறிந்து கொண்டு கடைகளை திறப்பதா?, வேண்டாமா? என்பது குறித்து வியாபாரிகள் முடிவு செய்வார்கள் என்று தெரிகிறது.
Related Tags :
Next Story