புஞ்சைபுளியம்பட்டி அருகே ரூ.20 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட லாரி உரிமையாளர் மீட்பு; 2 பேர் கைது-4 பேருக்கு வலைவீச்சு
புஞ்சைபுளியம்பட்டி அருகே ரூ.20 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட லாரி உரிமையாளர் மீட்கப்பட்டார். இது தொடர்பாக போலீசார் 2 பேரை கைது செய்தனர். மேலும் 4 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
புஞ்சைபுளியம்பட்டி
புஞ்சைபுளியம்பட்டி அருகே ரூ.20 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட லாரி உரிமையாளர் மீட்கப்பட்டார். இது தொடர்பாக போலீசார் 2 பேரை கைது செய்தனர். மேலும் 4 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
கடத்தி மிரட்டல்
புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள வண்டிபாளையம் குளத்து தோட்டத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 34). லாரி உரிமையாளர். இவரிடம் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மர்ம நபர்கள் 6 பேர் தங்களை போலீஸ் என்று அறிமுகம் செய்தனர். விசாரணைக்காக வரவேண்டும் என்று கூறி காரில் கடத்தி சென்றார்கள். பின்னர் சுரேசின் மனைவி சுகன்யாவை செல்போனில் தொடர்பு கொண்டு ரூ.20 லட்சம் கொடுத்தால்தான் உன் கணவரை விடுவிப்போம். இல்லை என்றால் கொன்றுவிடுவோம் என்று மிரட்டினார்கள்.
பணம் கேட்டனர்...
இதையடுத்து பதறிப்போன சுகன்யா இதுகுறித்து புஞ்சைபுளியம்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுகன்யாவை, கடத்தல்காரர்களுடன் பணம் கொடுப்பதுபோல் பேசவைத்து, அவர்களை பிடிக்க நினைத்தார்கள்.
இதற்கிடையே கடத்தல் காரர்கள் சுகன்யாவை தொடர்பு கொண்டு, கோவை மாவட்டம் அன்னூர் தென்னம்பாளையம் ரோட்டில் உள்ள கருப்பராயன் கோவில் அருகே பணத்துடன் நீ மட்டும் வர வேண்டும் என்று கூறினார்கள்.
மீட்பு
இந்தநிலையில் போலீசார் கூறியதுபோல் சுகன்யா ஒரு பையில் வெற்று காகிதங்களை பணம்போல் வைத்துக்கொண்டு கடத்தல்காரர்கள் சொன்ன இடத்துக்கு சென்றார். போலீசார் அவரை மாறுவேடத்தில் பின் தொடர்ந்தார்கள். அப்போது கருப்பராயன் கோவிலுக்கு சுகன்யா சென்றபோது, மர்ம நபர்கள் 2 பேர் ஒரு மோட்டார்சைக்கிளில் சுரேஷை உட்கார வைத்துக்கொண்டு வந்தார்கள். அதேநேரம் மாறுவேடத்தில் இருந்த போலீசார் மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேரையும் சுற்றிவளைத்து பிடித்து சுரேஷை மீட்டார்கள்.
2 பேர் கைது
அதேநேரம் பிடிபட்ட மோட்டார்சைக்கிளை பின்தொடர்ந்து ஒரு கார் வந்தது. அதில் கடத்தல் காரர்கள் 4 பேர் இருந்தார்கள். தங்களுடைய கூட்டாளிகள் 2 பேர் போலீசாரிடம் பிடிபட்டதும் உடனே அவர்கள் காரில் தப்பிச்சென்றுவிட்டார்கள்.
விசாரணையில் பிடிபட்டவர்கள் கோவை மாவட்டம் கணபதி பகுதியைச் சேர்ந்த பழைய பாத்திர வியாபாரி மணிகண்டன் (34) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் என்பதும் தெரிந்தது. இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து, சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மணிகண்டனை சிறையில் அடைத்தார்கள். 17 வயது சிறுவன் பொள்ளாச்சியில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு கொண்டு செல்லப்பட்டார். மேலும் காரில் தப்பிய 4 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கொடுக்கல்-வாங்கல் தகராறில் சுரேஷ் கடத்தப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story