கேரளாவுக்கு கடத்த முயன்ற 14 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
மார்த்தாண்டத்தில் வாகன தணிக்கையின் போது 14 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
குழித்துறை:
மார்த்தாண்டத்தில் வாகன தணிக்கையின் போது 14 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
வாகன தணிக்கை
நெல்லை, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் இருந்தும், குமரி மாவட்டத்தில் இருந்தும் கேரளாவுக்கு வாகனங்களில் ரேஷன் அரிசியை கடத்தப்பட்டு வருகிறது. அவற்றை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரும், வருவாய்த்துறை அதிகாரிகளும் அதிரடி சோதனைகளை மேற்கொண்டு கடத்தல் அரிசியை பறிமுதல் செய்து வருகின்றனர்.
மேலும் குமரி மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசியை சிலர் பொதுமக்களிடம் இருந்து குறைந்த விலைக்கு வாங்கி மொத்தமாக சேர்த்து கேரளாவுக்கு கடத்துகின்றனர். பின்னர் அங்கு சென்று அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர். இவ்வாறு பல வழிகளில் ரேஷன் அரிசி கேரளாவுக்கு கடத்தும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நேற்று காலையில் தக்கலை பயிற்சி துணை போலீஸ் சூப்பிரண்டு யோகேஷ், மார்த்தாண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜாண் கிறிஸ்துராஜ் தலைமையிலான போலீசார் மார்த்தாண்டம் மேம்பாலத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
14 டன் ரேஷன் அரிசி
அப்போது, ஒரு லாரி பின்பகுதி முழுவதும் தார்பாய் மூடப்பட்ட நிலையில் சென்று கொண்டிருந்தது. அதை போலீசார் நிறுத்த முன்றனர். ஆனால், டிரைவர் லாரியை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச் சென்றார்.
இதனால், சந்தேகமடைந்த போலீசார் அந்த லாரியை தங்களது வாகனத்தில் துரத்திச் சென்று மடக்கிப் பிடித்தனர். பின்னர், போலீசார் லாரியை சோதனை செய்தபோது, அதில் மூடை மூடையாக 14 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
டிரைவர் கைது
இதையடுத்து போலீசார் லாரியுடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இதுதொடர்பாக லாரி டிரைவரான குலசேகரம் கோட்டூர் கோணத்தை சேர்ந்த ராஜசேகர் என்ற பப்பு (வயது 29) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
முதல் கட்ட விசாரணையில் ரேஷன் அரிசி தூத்துக்குடியில் இருந்து கேரளாவுக்கு கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது. இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
புதுக்கடையிலும் பறிமுதல்
இதேபோல பறக்கும் படை தாசில்தார் அப்துல் மன்னான், துணை தாசில்தார் குழந்தை ராணி நாச்சியார் ஆகியோர் தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் இரவு புதுக்கடை ராமன்துறை மீனவ கிராமத்தில் ஒரு வீட்டை சோதனை செய்தனர். அப்போது, அந்த வீட்டின் பின்புறம் ஒரு டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்து காப்புக்காடு அரசு குடோனில் ஒப்படைத்தனர்.
Related Tags :
Next Story