சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விட்டுவிட்டு பெய்த மழை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது.
வங்க கடல் மற்றும் இலங்கை கடலோர பகுதிகளில் நிலைகொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி மெதுவாக நகரும் என்பதால் தமிழகத்தில் 2-ந் தேதி வரை அனேக இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதன்படி நேற்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலையில் இருந்து கருமேகங்கள் சூழ்ந்து ரம்மியமான சூழல் நிலவியது.
சென்னையில் காலையில் இருந்து லேசான சாரல் மழையுடன் தொடங்கியது. அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. எழும்பூர், கோடம்பாக்கம், கிண்டி, பரங்கிமலை, குரோம்பேட்டை, தாம்பரம் உள்பட சில இடங்களில் மிதமான மழை பெய்தது.
சென்னையைகாட்டிலும் புறநகர் பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. பெருங்களத்தூர், வண்டலூர், ஊரப்பாக்கம், மாதவரம், செங்குன்றம், அம்பத்தூர், மேடவாக்கம் உள்பட சில பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பொழிந்தது. இதனால் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்துக்கு (இன்றும், நாளையும்) மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் ஆய்வு மைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
Related Tags :
Next Story