பெட்டி கடையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு
சென்னை பெட்டி கடையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
சென்னையை அடுத்த மணலி, ஜாகீர் உசேன் தெருவைச் சேர்ந்தவர் செல்வம். இவருடைய மனைவி செல்வி (வயது 52). நேற்று முன்தினம் செல்வி, வயிறு வலிப்பதாக கூறி மணலி ஈ.வே.ரா. பெரியார் தெருவில் உள்ள பெட்டி கடையில் குளிர்பானம் வாங்கி குடித்தார். சிறிது நேரத்தில் அவர் வாயில் நுரை தள்ளி, சுருண்டு விழுந்து பலியானார்.
இதுகுறித்து தகவலறிந்த திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ஜெகதீஷ் சந்திரபோஸ், சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சதீஷ்குமார் ஆகியோர் அந்த பெட்டிகடையில் நேற்று திடீரென ஆய்வு செய்தனர். அப்போது இறந்து போன பெண் செல்வி குடித்த குளிர்பான வகைகளை கைப்பற்றி ஆய்வு செய்ததில், அவை காலாவதியானது என தெரியவந்தது.
அவற்றை கைப்பற்றிய அதிகாரிகள், ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த குளிர்பானம் ஹூக்ளியில் தயாரிக்கப்பட்டு, கொடுங்கையூரில் உள்ள குடோனில் இருந்து கடைகளுக்கு விற்பனையாவது தெரியவந்தது. கொடுங்கையூர் குடோனுக்கு சென்ற அதிகாரிகள், அங்கிருந்து தற்காலிகமாக விற்பனையை நிறுத்த உத்தரவிட்டனர்.
Related Tags :
Next Story