ஐ.எப்.எஸ். தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த பழனி இளம்பெண்
இந்திய வனப்பணி (ஐ.எப்.எஸ்.) தேர்வில் பழனியை சேர்ந்த இளம்பெண், மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார்.
பழனி:
இந்திய வனப்பணி (ஐ.எப்.எஸ்.) தேர்வில் பழனியை சேர்ந்த இளம்பெண், மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார்.
இளம்பெண் சாதனை
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள கலிக்கநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் நடராஜன். இவர் கீரனூர் அரசுப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சந்திராமணி. இவர் பழனியில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றுகிறார். இவர்களது மூத்த மகள் திவ்யா (வயது 24). இவர் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்வுக்கு தயாராகி வந்தார். மேலும் சமீபத்தில் நடந்த வனப்பணிக்கான ஐ.எப்.எஸ். தேர்வை அவர் எழுதியிருந்தார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் அந்த தேர்வுக்கான முடிவுகள் வெளியானது. இதில், திவ்யா தேசிய அளவில் 10-வது இடம் பிடித்தார். மேலும் தமிழக அளவில் முதலிடம் பிடித்ததுடன், முதல் முயற்சியிலேயே அவர் சாதனை படைத்துள்ளார். இதுகுறித்து திவ்யாவிடம் கேட்டபோது கூறியதாவது:-
முதல் முயற்சியிலேயே...
பழனி மற்றும் தாராபுரத்தில் பள்ளிப்படிப்பை முடித்தேன். பின்னர் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் படித்தேன். 2019-ல் கல்லூரி படிப்பை முடித்ததும் அரசின் உயரிய பணிக்கு செல்ல வேண்டும் என்று முடிவெடுத்து, அதற்கான முயற்சியில் இறங்கினேன். தொடக்கத்தில் ஐ.ஏ.எஸ். ஆக வேண்டும் என்பதுதான் எனது கனவாக இருந்தது. இதற்காக சென்னையில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் தங்கி படித்தேன்.
பின்னர் ஐ.எப்.எஸ். பணியின் முக்கியத்துவத்தை தெரிந்துகொண்டேன். மேலும் சிறு வயதில் இருந்தே விலங்கு, செடி, கொடிகள் என்றால் கொள்ளை ஆர்வம். இதனால் ஐ.எப்.எஸ். பணிக்கு தயாராக தொடங்கினேன். இதில் முதல்நிலை தேர்வு கடினமாக இருந்தது. முதன்மை தேர்வு, நேர்முக தேர்வு எளிதாக இருந்தது. இருப்பினும் முதல் முயற்சியிலேயே வெற்றி பெறுவேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. தற்போதுகூட இது கனவா? அல்லது நனவா? என எண்ணி பார்க்கிறேன்.
செய்தித்தாள் வாசிக்க வேண்டும்
ஒரு நாளைக்கு 6-ல் இருந்து 8 மணி நேரம் ஒதுக்கி படிப்பேன். தினமும் என்ன படிக்க வேண்டும் என்பதை இலக்காக நிர்ணயித்து, அதை அன்றைய தினமே படித்து முடிப்பேன். பெரும்பாலும் தேர்வுக்கு தயாராக தொடங்கியதில் இருந்தே செய்தித்தாள் வாசிக்கும் பழக்கம் ஏற்பட்டது. மேலும் ஆன்லைன் மூலமும் பல்வேறு புத்தகங்கள் படித்தேன். பொதுவாகவே கிராமப்புறங்களில் இருந்து அரசு பணிக்கு தயாராகும் மாணவர்கள் தினமும் செய்தித்தாள் வாசிக்க வேண்டும். அதோடு ஆன்லைன் மூலம் கிடைக்கும் பல்வேறு தகவல்களையும் திரட்டி, அதை தயார்படுத்த வேண்டும். எந்நேரமும் படிக்காமல் அதற்காக குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி, படிக்க வேண்டியது என்னென்ன என்பதை தீர்மானித்து படித்தால் நிச்சயம் வெற்றி பெறலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story