தொடர் மழையால் 21 ஏரிகள் நிரம்பின விவசாயிகள் மகிழ்ச்சி


தொடர் மழையால் 21 ஏரிகள் நிரம்பின விவசாயிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 30 Oct 2021 10:05 PM IST (Updated: 30 Oct 2021 10:05 PM IST)
t-max-icont-min-icon

தொடர் மழையால் கடலூர் மாவட்டத்தில் 21 ஏரி, அணைகள் நிரம்பியுள்ளன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கடலூர், 

கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த மழையால் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரி, அணைகள் மற்றும் குளங்களின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. இதற்கிடையே கடந்த 25-ந் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய பிறகு மாவட்டம் முழுவதும் மேலும் பரவலாக மழை பெய்தது.

இதில் நேற்று முன்தினம் அதிகாலை முதல் நள்ளிரவு வரை இடைவிடாது கனமழை கொட்டி தீர்த்தது. இந்த மழையால் அனைத்து நீர்வரத்து வாய்க்கால்கள் மற்றும் ஆறுகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. 

இதன் காரணமாக ஏற்கனவே வாலாஜா ஏரி நிரம்பிய நிலையில், நேற்று மட்டும் நத்தமேடு அணைக்கட்டு, சிப்பம் ஏரி, உளுத்தூர் அணைக்கட்டு, அம்பாபுரம் அணைக்கட்டு உள்பட மாவட்டம் முழுவதும் 21 ஏரி மற்றும் அணைக்கட்டுகள் நிரம்பியுள்ளன.

சென்னைக்கு 61 கனஅடி

மேலும் மாவட்டத்தில் உள்ள 22 ஏரி மற்றும் அணைக்கட்டுகளில் 76 முதல் 99 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. இதுதவிர 27 ஏரி, குளங்களில் 51 முதல் 75 சதவீதமும், 51 ஏரிகளில் 26 முதல் 50 சதவீதமும், 107 ஏரி மற்றும் அணைக்கட்டுகளில் 25 சதவீதத்திற்குள்ளும் தண்ணீர் இருப்பு உள்ளது.


இதுதவிர கீழணையில் இருந்து வடவாறு வழியாக 479 கனஅடி தண்ணீர் வீராணம் ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதன் மூலம் 47.50 அடி கொள்ளளவு கொண்ட வீராணம் ஏரியின் நீர்மட்டம் 44.10 அடியை எட்டியுள்ளது.

 சென்னை மக்களின் குடிநீருக்காக வினாடிக்கு 61 கனஅடி தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் 7.5 அடி கொள்ளளவு கொண்ட சேத்தியாத்தோப்பு அணைக்கட்டில் 5 அடிக்கும், 6.50 அடி கொள்ளளவு கொண்ட பெருமாள் ஏரியில் 5.50 அடிக்கும் தண்ணீர் இருப்பு உள்ளது.

விவசாயிகள் மகிழ்ச்சி

இதுதவிர கடலூர் மாவட்டத்தில் வழக்கமாக அக்டோபர் மாதங்களில் பெய்யும் மழை அளவை விட, இந்த ஆண்டு அதிகளவில் மழை பெய்துள்ளது. அதாவது அக்டோபர் மாதம் சராசரியாக 220 மில்லி மீட்டர் மழை பெய்யும் நிலையில், தற்போது 239 மில்லி மீட்டர் பெய்துள்ளது.

 மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரி, குளங்கள் மற்றும் அணைக்கட்டுகள் நிரம்பி வருவதால் சம்பா சாகுபடி பணியில் ஈடுபட உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story