மழைவெள்ளத்தால் அதிகம் பாதிக்கக்கூடிய இடங்களில் உள்ள நிவாரண முகாம்களில் அத்தியாவசிய பொருட்களை தயாராக வைத்திருங்கள் அதிகாரிகளுக்கு கலெக்டர் பாலசுப்பிரமணியம் உத்தரவு


மழைவெள்ளத்தால் அதிகம் பாதிக்கக்கூடிய இடங்களில் உள்ள நிவாரண முகாம்களில் அத்தியாவசிய பொருட்களை தயாராக வைத்திருங்கள் அதிகாரிகளுக்கு கலெக்டர் பாலசுப்பிரமணியம் உத்தரவு
x
தினத்தந்தி 30 Oct 2021 10:26 PM IST (Updated: 30 Oct 2021 10:26 PM IST)
t-max-icont-min-icon

மழைவெள்ளத்தால் அதிகம் பாதிக்கக்கூடிய இடங்களில் உள்ள நிவாரண முகாம்களில் அத்தியாவசிய பொருட்களை தயாராக வைத்திருக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் பாலசுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளார்.

கடலூர், 

வடகிழக்கு பருவமழை தொடர்பாக மேற்கொள்ளவேண்டிய பணிகள் குறித்து மண்டல அலுவலர்கள் மற்றும் குறு வட்ட அளவிலான குழுக்களுடன் கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார்.

பின்னர் அவர் கூறுகையில், மண்டல அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வட்டார அளவிலான குழுவில் உள்ள துறைசார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் மேற்கொண்டு பேரிடர் காலங்களில் அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

 மேலும், குறுவட்ட அளவில் அமைக்கப்பட்ட குழுவுடன் அவ்வப்போது ஆய்வுக்கூட்டம் நடத்தி அக்குழுவினர் கிராம அளவில் கூட்டங்கள் நடத்திட அறிவுறுத்த வேண்டும்.

பல்நோக்கு மையங்கள்

பேரிடர் காலத்தில் பொதுமக்களை தங்க வைக்கக்கூடிய பல்நோக்கு மையங்கள், புயல் பாதுகாப்பு மையங்கள் மற்றும் தற்காலிக நிவாரண முகாம்கள் ஆகியவற்றை தணிக்கை செய்தல் வேண்டும்.

 மேலும் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வட்டாரத்தில் உள்ள அலுவலகத்தில், மிக அதிகம் பாதிக்கக்கூடிய பகுதிகளுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் முதலுதவிப் பொருட்கள் ஆகியவற்றை நிவாரண முகாம்களில் தயார் நிலையில் வைப்பதற்கு முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கால்வாய் மற்றும் வாய்க்கால்களை ஆய்வு செய்து அவற்றின் முகத்துவாரம் மற்றும் வடிகால் பகுதி சரியாக உள்ளதா? என்பதனை கண்டறிந்து தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். 

தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஏற்படும் பாதிப்புகளை முதல்நிலை பொறுப்பாளர்களுடன் ஒருங்கிணைந்து, சரியான நேரத்தில் பொதுமக்களை வெளியேற்றம் செய்து, மனித உயிர்களை காப்பாற்ற வேண்டும். குறிப்பாக முதியோர், மாற்றுத்திறனாளிகள், பெண்கள், குழந்தைகளை காப்பாற்றுவதில் முன்னுரிமை அளித்தல் வேண்டும்.


வாட்ஸ்-அப் குழு

மண்டல அலுவலர்கள் தங்களுக்கு கீழ் செயல்படும் துறை சார்ந்த அலுவலர்களை ஒருங்கிணைக்கும் பொருட்டு வாட்ஸ்-அப் குழு ஏற்படுத்தி தகவல்களை பரிமாற்றம் செய்தல் வேண்டும். 

குறுவட்ட அளவிலான குழுக்கள் மிக அதிகம் பாதிக்கப்படக்கூடிய பகுதிகள் மற்றும் அதிகம் பாதிக்கப்படக்கூடிய பகுதிகள் என வகைப்படுத்தப்பட்டுள்ள அனைத்து கிராமங்களிலும், கிராம குழுவினர் வெள்ள தடுப்பு முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும்.

மேலும் கிராமத்திலுள்ள அனைத்து குழு உறுப்பினர்களுடன் ஒருங்கிணைத்து வாட்ஸ்-அப் குழு ஒன்று உருவாக்க வேண்டும். டி.என்.ஸ்மார்ட்(TNSMART) என்ற செயலியை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும், 

அதனை பதிவிறக்கம் செய்யவும் உதவி செய்ய வேண்டும். மழை எச்சரிக்கை குறித்து தகவல் வரப்பெற்றவுடன் அனைத்து குறுவட்ட அலுவலர்களும், கிராம அளவிலான குழு தலைவருக்கு தெரிவித்து ஆயத்த நிலையில் இருக்குமாறு தகவல் தெரிவிக்க வேண்டும்.

தங்கும் இடம்

வெள்ள பாதிப்பு அபாயம் ஏற்படுவதற்கு முன்பாக பொதுமக்களை மற்ற குழுவினருடன், பாதுகாப்பான தங்கும் இடங்களுக்கு உடனடியாக அழைத்து செல்ல வேண்டும். தீயணைப்பு துறையினர், நெடுஞ்சாலை துறையினர் பேரிடர் காலங்களில் சாலைகள் சேதமடைந்து விட்டால் பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியே செல்வதற்கு வழிக்காட்டிகளை வைக்க ஏற்பாடு செய்தல் வேண்டும்.

 சாலைகளில் மரங்கள் விழுந்தால் சம்பந்தப்பட்ட துறையினருக்கு தகவல் தெரிவித்து, உடனடியாக அவற்றை அகற்ற வேண்டும் என்றார்.
கூட்டத்தில் மண்டல அலுவலர்கள், குறுவட்ட அளவிலான குழு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story