உடுமலை பகுதியில் சின்ன வெங்காயத்திற்கான விலை வீழ்ச்சி


உடுமலை பகுதியில் சின்ன வெங்காயத்திற்கான விலை வீழ்ச்சி
x
தினத்தந்தி 30 Oct 2021 10:28 PM IST (Updated: 30 Oct 2021 10:28 PM IST)
t-max-icont-min-icon

உடுமலை பகுதியில் சின்ன வெங்காயத்திற்கான விலை வீழ்ச்சி

தளி, 
உடுமலை பகுதியில் சின்ன வெங்காயத்திற்கான விலை வீழ்ச்சி அடைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
65 நாட்களில் அறுவடை
உடுமலையின் சுற்றுப்புற பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்குள்ள விவசாயிகள் திருமூர்த்தி மற்றும் அமராவதி அணைகள் கிணறு மற்றும் ஆழ்குழாய் கிணறுகள் ஆகிய நீராதாரங்களை அடிப்படையாகக் கொண்டு நீர் இருப்பு மற்றும் நீர்வரத்துக்கு ஏற்றவாறு சாகுபடி பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தென்னை, வாழை, காய்கறிகள், தானியங்கள், கீரைவகைகள் உள்ளிட்டவை சாகுபடி செய்யப்படுகிறது. 
அவற்றில் அன்றாட உணவில் பயன்படுத்தப்படும் பொருளான சின்ன வெங்காயம் முக்கியத்துவம் பெறுகிறது. வெப்ப மண்டல பயிரான இதை விதைகள் மூலமாக நாற்றுகளை உற்பத்தி செய்தும் நேரடியாக வெங்காயத்தையும் நடவு செய்கின்றனர். நாற்றுக்கள் மூலம் நடவு செய்தால் 90 நாட்களிலும் வெங்காயத்தை நடவு செய்தால் 65 நாட்களிலும் அறுவடை செய்யப்படுகிறது.
விவசாயிகள் கவலை
இதில் முழுமையான விளைச்சல் அப்போதைய பருவநிலையையும், லாபம் ஈட்டுவது அன்றைய விலையை பொருத்து அமையும். ஒருபுறம் நடவு மறுபுறம் பராமரிப்பு அறுவடை என உடுமலை பகுதியில் தொடர்ந்து சின்ன வெங்காயம் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது சின்ன வெங்காய சாகுபடியில் கைதேர்ந்த விவசாயிகள் ஒவ்வொரு பட்டமாக நடவு செய்து வருகின்றனர். அந்த வகையில் உடுமலை பகுதியில் நடவு செய்யப்பட்ட வெங்காயம் பல்வேறு கட்டங்களாக அறுவடை செய்யப்பட்டு வருகிறது.
இதில் விவசாயிகள் கூலித்தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் கடந்த சில நாட்களாக சின்ன வெங்காயத்தின் விலை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது. நாட்டு மற்றும் நாற்று வெங்காயம் தரம் விளைச்சல் நன்றாக இருந்தும் குறைந்தளவே விலை கிடைக்கிறது. இதனால் முதலீட்டு தொகை திரும்ப கிடைக்காததால் விவசாயிகள் நஷ்டம் அடைந்து கவலையில் உள்ளனர். அதை ஈடுகட்டுவதற்காக மாற்றுப்பயிர் சாகுபடி செய்வதிலும் முனைப்பு காட்டி வருகின்றனர்.

Next Story