தூத்துக்குடியில் விடிய, விடிய கனமழை; 150 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது
தூத்துக்குடியில் விடிய, விடிய கனமழை பெய்தது. இதனால் 150 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.
தூத்துக்குடி:
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோர பகுதிகளில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தமிழகத்தில் தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
கனமழை
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் முழுவதும் சாரல்மழை பெய்தது. தொடர்ந்து அன்று இரவு பெய்ய தொடங்கிய கனமழை விடிய, விடிய வெளுத்து வாங்கியது. இதனால் தூத்துக்குடியில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. ராஜீவ்நகர், தாளமுத்துநகர், கலைஞர் நகர், ராஜீவ்காந்தி நகர் உள்ளிட்ட இடங்களில் ஏராளமான வீடுகளை தண்ணீர் சூழ்ந்து உள்ளது. சுமார் 150 வீடுகளை வெள்ளம் சூழ்ந்து உள்ளதால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள ஒரு பெரிய மரம் நேற்று சாய்ந்து விழுந்தது. ஆஸ்பத்திரி வளாகத்தில் மழைநீர் தேங்கி நிற்பதால் நோயாளிகள் அவதிப்பட்டனர்.
தண்டவாளம் மூழ்கியது
மேலும், கனமழை காரணமாக தூத்துக்குடி ரெயில் நிலையத்தில் தண்டவாளம் முழுவதும் மழைநீரில் மூழ்கியது. இதனால் நேற்று காலை சென்னையில் இருந்து தூத்துக்குடி வந்த முத்துநகர் விரைவு ரெயில் மேலூர் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு பயணிகள் இறக்கி விடப்பட்டனர். மைசூர்-தூத்துக்குடி விரைவு ரெயில் மணியாச்சி ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. இதனால் தூத்துக்குடி செல்லும் பயணிகள் கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் இறங்கி பஸ் மூலம் ஊருக்கு சென்றனர். ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் பெரிதும் சிரமப்பட்டனர்.
தூத்துக்குடி ரெயில் நிலையத்தில் உள்ள இருப்புப்பாதை காவல் போலீஸ் நிலையத்தில் மழைநீர் நிரம்பி காணப்படுகிறது.
ஸ்ரீவைகுண்டத்தில் 184 மி.மீ. மழை பதிவு
தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகப்பட்சமாக ஸ்ரீவைகுண்டத்தில் 184 மில்லி மீட்டரும், ஓட்டப்பிடாரத்தில் 127 மில்லி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது.
மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் வருமாறு:-
திருச்செந்தூர்-47, காயல்பட்டினம்-85, குலசேகரன்பட்டினம்-19, விளாத்திகுளம்-32, காடல்குடி-12, வைப்பார்-72, சூரங்குடி-42, கோவில்பட்டி-33, கழுகுமலை-7, கயத்தாறு-75, கடம்பூர்-76, மணியாச்சி-75, வேடநத்தம்-20, கீழஅரசடி-13, எட்டயபுரம்-31, சாத்தான்குளம்-48, தூத்துக்குடி-91.
உப்பு உற்பத்தி நிறுத்தம்
தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக உப்பளப்பணி முற்றிலும் நிறுத்தப்பட்டு உள்ளது. உப்பளங்களில் சேமித்து வைக்கப்பட்டு உள்ள உப்பு பாதுகாப்பாக மூடி வைக்கப்பட்டு உள்ளது.
நேற்று லேசான வெயில் அடித்தது.
கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து பள்ளிக்கூடங்களுக்கும் 2-வது நாளாக நேற்றும் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவிட்டார்.
மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
இந்த மழை காரணமாக ஏரல் தாலுகாவில் 3 வீடுகள் பகுதி சேதம் அடைந்தன. மேலும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பலத்த காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.
இதைத்தொடர்ந்து தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் உள்ள 245 விசைப்படகுகளும் கடலுக்கு செல்லவில்லை. அவை மீன்பிடி துறைமுகத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. நாட்டுப்படகு மீனவர்களும் கடலுக்கு செல்லவில்லை.
Related Tags :
Next Story