தனியார் பள்ளியை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம்


தனியார் பள்ளியை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 30 Oct 2021 11:07 PM IST (Updated: 30 Oct 2021 11:07 PM IST)
t-max-icont-min-icon

விளையாடியபோது மாணவனின் கண்ணில் காயம் ஏற்பட்டதை கண்டித்து தனியார் பள்ளியை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

போடி:

போடி அருகே உள்ள பத்ரகாளிபுரம் கிராமத்தில், தனியார் தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 180 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். 10 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.

 நாளை (திங்கட்கிழமை) முதல் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், இந்த தனியார் பள்ளியில் வழக்கம் போல வகுப்புகள் நடந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் கடந்த 26-ந்தேதியன்று மாணவர்கள் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது 3-ம் வகுப்பு மாணவன் உலகேஸ்வரனின் வலது கண்ணில், மற்றொரு மாணவன் வைத்திருந்த குச்சி குத்தியதாக தெரிகிறது. இதில் காயம் அடைந்த மாணவனுக்கு, தேனியில் உள்ள தனியார் கண் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. 

பின்னர் மேல் சிகிச்சைக்காக, மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உலகேஸ்வரன் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனை செய்தபோது, கண்ணின் கருவளையம் பாதிக்கப்பட்டிருந்தது.

 இதனையடுத்து அவருக்கு 12 தையல்கள் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு திரும்பினார். இதற்கிடையே அந்த பள்ளியை மூட கல்வித்துறையினர் உத்தரவிட்டனர். 

இந்தநிலையில் நேற்று காலை உலகேஸ்வரனின் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் சிறிதுநேரத்தில் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தினால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story