தூத்துக்குடி சிவன் கோவிலில் ஐப்பசி திருவிழா தேரோட்டம்
தூத்துக்குடி சிவன் கோவிலில் ஐப்பசி திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களில் ஐப்பசி மாதம் நடைபெறும் திருக்கல்யாண விழாவும் முக்கியமான ஒன்றாகும். இந்த ஐப்பசி திருவிழா கடந்த 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி ஒவ்வொரு நாளும் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. பின்னர் மாலையில் பாகம்பிரியாள் அம்பாளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி ரத வீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடந்தது.
9-ம் திருவிழாவான நேற்று முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடந்தது. இதையொட்டி சுவாமி-அம்பாளுக்கு காலையில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரில் பாகம்பிரியாள் அம்பாள் எழுந்தருளினார். இதையடுத்து தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். ரதவீதிகளில் நடந்த இந்த தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக, தேரடி மாடனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
10-ம் திருவிழாவான இன்று (ஞாயிற்றுக்கிழமை) தீர்த்தவாரி நடக்கிறது. பின்னர் மாலையில் சிவ பூஜைகள் செய்யப்பட்டு அம்பாள் பூப்பல்லக்கில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான சங்கரராமேஸ்வரர்- பாகம்பிரியாள் அம்பாள் திருக்கல்யாண வைபவம் நாளை (திங்கட்கிழமை) நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story