உரத்தட்டுப்பாடு, போலி உரங்களை தடுக்க பறக்கும் படை குழு அமைப்பு


உரத்தட்டுப்பாடு, போலி உரங்களை தடுக்க பறக்கும் படை குழு அமைப்பு
x
தினத்தந்தி 30 Oct 2021 11:17 PM IST (Updated: 30 Oct 2021 11:17 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் உரத்தட்டுப்பாட்டை நீக்கவும், போலி உரங்களை தடுக்கவும் பறக்கும் படை குழு அமைக்கப்படும் என்று விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில் கலெக்டர் மோகன் கூறினார்.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாதாந்திர விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் டி.மோகன் தலைமை தாங்கி, விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். அப்போது விவசாயிகள், தங்கள் கோரிக்கைகள் குறித்து பேசியதாவது:-
முண்டியம்பாக்கம் தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகம், கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய ரூ.20 கோடியை பாக்கி வைத்துள்ளது. அந்த பணத்தை விவசாயிகளுக்கு பெற்றுத்தர மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும். எந்த ஆலைக்கு வேண்டுமானாலும் கரும்புகளை அரவைக்கு எடுத்துச்செல்லலாம் என்ற உத்தரவை மாவட்ட கலெக்டர் பிறப்பிக்க வேண்டும். எல்லா இடங்களிலும் உரத்தட்டுப்பாடு இருக்கிறது, அந்த தட்டுப்பாட்டை போக்கி தடையின்றி உரம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். அதேநேரத்தில் போலி உரங்கள் நுழைவதை தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டு உடைந்து சேதமான நிலையில் அதனை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும். 

பயிர் கடன்

நமது மாவட்டத்தில் பயிர் கடன் கிடைப்பதில் சிரமமாக உள்ளது. பயிர் கடன் கேட்டு விண்ணப்பித்தால் மாதக்கணக்கில் அலைக்கழிக்கின்றனர். பயிர் வைக்கக்கூடிய கஷ்டத்தை விட கடன் வாங்குவது பெரிய கஷ்டமாக உள்ளது. எனவே கூட்டுறவு வங்கிகளில் தகுதியுள்ள விவசாயிகளுக்கு பயிர் கடன் உடனுக்குடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எள், உளுந்து விதைகள் அனைத்து இடங்களிலும் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். நந்தன் கால்வாய் நீர் பாசன திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். கூட்டுறவு வங்கிகளில் கறவை மாடுக்கான கடன் அனைத்து விவசாயிகளுக்கும் புறக்கணிக்கப்படுகிறது. அதை வழங்க ஏற்பாடு செய்யுங்கள்.
அரியூர் ஆலைக்குட்பட்ட பகுதியை பொது பகுதியாக அறிவித்து நாங்கள் விருப்பப்படுகிற ஆலைக்கு கரும்புகளை எடுத்துச்செல்ல மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

பறக்கும் படை குழு

இதற்கு பதிலளித்து கலெக்டர் டி.மோகன் பேசுகையில், தீபாவளிக்குள் கரும்பு பணத்தை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்றும் தவறும்பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முண்டியம்பாக்கம் சர்க்கரை ஆலை நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. உரத்தட்டுப்பாட்டை நீக்குதல், போலி உரம் தடுப்பு இவற்றுக்காக ஒரு குழு அமைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதில் திருப்தியில்லை என்றால் வருவாய்த்துறை, காவல்துறை, வேளாண் துறை அடங்கிய பறக்கும் படை குழுவை அமைத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டை சீரமைக்க ரூ.52 கோடியில் கோப்புகள் தயார் செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் சீரமைப்பு பணிகள் தொடங்கும். காட்டுப்பன்றிகளின் அட்டகாசத்தை ஒழிக்கவும் வனத்துறை மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும். இனி வாரந்தோறும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அந்தந்த கிராமங்களுக்கே கம்ப்யூட்டர், பிரிண்டர் ஆகியவற்றை எடுத்துச்சென்று பட்டா மாறுதல் நிறைவேற்றப்படும். அங்கு எந்த குறைகள் இருந்தாலும் என்னிடம் நேரடியாக தகவல் சொல்லலாம்.
மேலும் வாரந்தோறும் திங்கட்கிழமையன்று பயிர் கடன் சம்பந்தமாக கூட்டம் நடத்தி உடனுக்குடன் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். இதேபோல் விவசாயிகள் தெரிவித்த மற்ற கோரிக்கைகளும் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்றார்.
கூட்டத்தில் திண்டிவனம் சப்-கலெக்டர் அமித், வேளாண் இணை இயக்குனர் ரமணன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் பிரபாகரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) பெரியசாமி, திண்டிவனம் வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர் ஸ்ரீதர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story