நடிகர் புனித் ராஜ்குமார் உடலுக்கு லட்சக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி
நடிகர் புனித் ராஜ்குமாரின் உடலுக்கு மாநிலம் முழுவதும் இருந்து சாரை சாரையாக வந்த லட்சக்கணக்கான மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுகிறது.
பெங்களூரு:
புனித் ராஜ்குமார் மரணம்
கன்னட திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ‘பவர் ஸ்டார்’ புனித் ராஜ்குமார் (வயது 46). இவர் நேற்று முன்தினம் பெங்களூருவில் மாரடைப்பால் மரணம் அடைந்தார். இவர் மறைந்த கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார்-பர்வதம்மா தம்பதியின் இளையமகன் ஆவார். அவரது இந்த மரணம், அவரது குடும்பத்தினர், ரசிகர்கள், கன்னட மக்களை சோக கடலில் ஆழ்த்தியுள்ளது.
அத்துமட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய திரை உலகையும் அவரது மரணம் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, கவர்னர் கெலாட், கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் உள்பட அரசியல் கட்சிகளின் தலைவர்கள், கன்னடம் உள்பட இந்திய திரை உலக நட்சத்திரங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.
புனித் ராஜ்குமார் மரணம் அடைந்ததாக நேற்று முன்தினம் மதியம் 2.30 மணிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து விக்ரம் மருத்துவமனையில் இருந்து அவரது உடல் சதாசிவநகரில் உள்ள அவரது வீட்டிற்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு புனித் ராஜ்குமாரின் உடலை பார்த்து குடும்பத்தினர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். சுமார் 4 மணி நேரம் அவரது உடல் வீட்டில் வைக்கப்பட்டிருந்தது.
விடிய விடிய அஞ்சலி
பின்னர் இரவு 7 மணியளவில் புனித் ராஜ்குமாரின் உடல் அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் கன்டீரவா மைதானத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அமைக்கப்பட்டிருந்த பந்தலில் அவரது உடல் பொதுமக்கள், ரசிகர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. முதலில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உள்பட மந்திரிகள் அஞ்சலி செலுத்தினர். அதைத்தொடர்ந்து ரசிகர்கள் நீண்ட வரிசையில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
மேலும் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள குக்கிராமங்களில் இருந்தும் ரசிகர்களும், பொதுமக்களும் பெங்களூருவை நோக்கி சாரை சாரையாக வந்த வண்ணம் இருந்தனர்.
இதனால் புனித் ராஜ்குமாரின் உடல் வைக்கப்பட்டு இருந்த கன்டீரவா மைதானம் முன்பு அலைகடலென மக்கள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் முண்டியடித்துக்கொண்டு மைதானத்திற்குள் செல்ல முயன்றனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் கூட்டத்தினரை ஒழுங்குப்படுத்த அவ்வப்போது போலீசார் தடியடி நடத்தினர்.
இருப்பினும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விடிய, விடிய மாநிலத்தின் மூலைமுடுக்குகளில் இருந்து வந்த சிறுவர்கள், வாலிபர்கள், பெரியவர்கள், பெண்கள் என பல்வேறு தரப்பினரும் நீண்ட கியூ வரிசையில் நின்று புனித் ராஜ்குமார் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
அங்கு குவிந்திருந்தவர்கள் அப்பு.... அண்ணா... என்று கண்ணீர்விட்டு கதறினர். பலர் புனித் ராஜ்குமாரின் உருவப்படங்களை கைகளில் ஏந்திய படி வந்து அஞ்சலி செலுத்தினர்.
போக்குவரத்து நெரிசல்
பெங்களூரு மட்டுமின்றி சாம்ராஜ்நகர் முதல் பீதர் வரை மாநிலம் முழுவதும் ரசிகர்கள் வாகனங்களில் பெங்களூரு கன்டீரவா மைதானத்தை நோக்கி வந்தனர். இதனால் கன்டீரவா மைதானத்தை சுற்றியுள்ள சாலைகளில் போக்குவரத்து நெரிசல் உண்டானது. இதனால் வாகனங்களை நிறுத்த செயிண்ட் ஜான்ஸ் கல்லூரி வளாகத்தில் போலீசார் ஏற்பாடு செய்தனர்.
ரசிகர்கள் அங்கு தங்களின் வாகனங்களை நிறுத்திவிட்டு நடைபயணமாக மைதானத்திற்கு நடந்து வந்தனர். ரசிகர்கள் வரிசையில் வந்தபடியே இருந்தனர். கூட்டம் குறையவே இல்லை. நேற்று காலையும் மக்கள் புனித் ராஜ்குமார் உடலுக்கு அஞ்சலி செலுத்த தொடர்ந்து வந்து கொண்டே இருந்தனர். அவ்வப்போது லேசான மழையும் பெய்தபடி இருந்தது. மழையை பொருட்படுத்தாமல் வரிசையில் நின்று அவர்கள், புனித் ராஜ்குமார் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் 1,000-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர். 2 கூடுதல் போலீஸ் கமிஷனர்கள், 19 துணை போலீஸ் கமிஷனர்கள், 50-க்கும் மேற்பட்ட உதவி கமிஷனர்கள், 100-க்கும் மேற்பட்ட இன்ஸ்பெக்டர்கள் இந்த பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர்.
மகள் வருகை
இதன் காரணமாக பெங்களூருவில் நேற்று எங்கும் அசம்பாவித சம்பவங்கள் நிகழவில்லை. அமெரிக்காவில் இருந்து அவரது மகள் துருதி, விமானம் மூலம் டெல்லி வந்து அங்கிருந்து மற்றொரு விமானத்தில் பெங்களூரு வந்து சேர்ந்தார். அவரை போலீசார் பாதுகாப்புடன் கன்டீரவா மைதானத்திற்கு அழைத்து வந்தனர்.
அங்கு தனது தந்தையின் உடலை பார்த்து அவர் கதறி அழுதார். இது அங்கிருந்த குடும்பத்தினர் மற்றும் தொலைக்காட்சியில் அதை நேரலையில் பார்த்து கொண்டிருந்த ரசிகர்களின் நெஞ்சை உருக்குவதாக இருந்தது.
கவர்னர் அஞ்சலி
கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட் நேரில் வந்து, புனித் ராஜ்குமாரின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக், போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா உள்பட மந்திரிகள் பலர் நேரில் வந்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.
அதைத்தொடர்ந்து சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, மத்திய அரசு சார்பில் மத்திய நாடாளுமன்ற விவகாரம், நிலக்கரித்துறை மந்திரி பிரகலாத்ஜோஷி, மத்திய விவசாயத்துறை இணை மந்திரி ஷோபா, சட்டசபை சபாநாயகர் காகேரி, சித்தகங்கா மடாதிபதி சித்தலிங்க சுவாமி, ஆதிசுஞ்சனகிரி மடாதிபதி நிர்மலானந்தநாத சுவாமி, தெலுங்கு நடிகர்கள் சிரஞ்சீவி, வெங்கடேஷ், நந்தமுரி பாலகிருஷ்ணா, ஜூனியர் என்.டி.ஆர்., ஸ்ரீகாந்த், அலி, தமிழ் நடிகர்கள் சரத்குமார், அர்ஜூன், பிரபுதேவா, நடிகைகள் ரம்யா, சுமலதா எம்.பி., ராதிகா குமாரசாமி, பவித்ரா லோகேஷ், ரஷிதா ராம், தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் உள்பட பல்வேறு நடிகர்-நடிகைகள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
ராஜ்யோத்சவா விருது வழங்க வேண்டும்
மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு ராஜ்யோத்சவா விருது வழங்க வேண்டும் என்று நடிகர் ஜக்கேஷ் உள்பட கன்னட அமைப்புகள் மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன. இது தொடர்பாக அந்த அமைப்புகள் சமூக வலைதளங்களில் தகவலை பரப்பி வருகிறார்கள். இதற்கு கன்னட திரை உலகினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். கர்நாடகத்தில் நாளை (திங்கட்கிழமை) ராஜ்யோத்சவா விழா கொண்டாடப்படும் நிலையில், அந்த விருதுக்கான பட்டியலை அரசு இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த பட்டியலில் புனித் ராஜ்குமாரின் பெயரும் இடம் பெறும் என்று கூறப்படுகிறது.
ரசிகர்கள் ரோட்டில் கோஷம்
கன்டீரவா மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த புனித் ராஜ்குமாரின் உடலுக்கு அவரது ரசிகர்கள் லட்சக்கணக்கானோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். ரசிகர்கள் சாலைகளில் கன்னட கொடியை பிடித்தபடியும், கோஷங்களை எழுப்பியபடியும் வந்தனர். அப்பு வாழ்க என்று முழக்கமிட்டனர். வயது வித்தியாசமின்றி குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் கடும் கூட்டத்தையும் பொருட்படுத்தாமல் வரிசையில் வந்து புனித் ராஜ்குமாரின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்திவிட்டு சென்றனர்.
25 மணி நேரத்தில் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அஞ்சலி
மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் உடல் கன்டீரவா மைதானத்திற்கு நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு எடுத்துவரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அது முதல் நேற்று நள்ளிரவு வரை ரசிகர்கள் அலை அலையாக வந்து அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். 25 மணி நேரத்தில் புனித் ராஜ்குமார் உடலுக்கு 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தியதாக அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story