தென்காசியில் தொடர் மழை; கடனா நதி அணை நிரம்பியது


தென்காசியில் தொடர் மழை; கடனா நதி அணை நிரம்பியது
x
தினத்தந்தி 31 Oct 2021 2:48 AM IST (Updated: 31 Oct 2021 2:48 AM IST)
t-max-icont-min-icon

தென்காசியில் தொடர் மழை பெய்தது. அதன் காரணமாக கடனாநதி அணை நிரம்பியது.

தென்காசி:
தென்காசியில் தொடர் மழை பெய்தது. அதன் காரணமாக கடனாநதி அணை நிரம்பியது.

பரவலாக மழை

வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தென்காசி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
நேற்று முன்தினம் இரவில் தொடங்கிய மழை விடிய, விடிய ெபய்தது. சில இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. இந்த தொடர் மழை நேற்றும் நீடித்தது. செங்கோட்டை, சிவகிரி சங்கரன்கோவில் ஆகிய பகுதிகளில் காலையில் பரவலாக மழை பெய்தது. தென்காசி மாவட்டத்தில் அதிகபட்சமாக கருப்பாநதி அணை பகுதியில் 64 மில்லி மீட்டர் மழை பெய்தது.

குற்றாலம் அருவிகள்

மழையால் குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. மெயின் அருவியில் பாதுகாப்பு வளையத்தை தாண்டி தண்ணீர் விழுந்தது. கொரோனா கட்டுப்பாடு காரணமாக சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் அருவிக்கரைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
மேலும் தென்காசி மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
ராமநதி அணை 74 அடியாகவும், அடவிநயினார் அணை 127 அடியாகவும் உள்ளது. கருப்பாநதி அணை நிரம்பியதால் அணைக்கு வரும் 250 கன அடி தண்ணீர் அப்படியே மதகு வழியாக வெளியேற்றப்படுகிறது. இதேபோல் குண்டாறு அணையும் நிரம்பி வழிகிறது. இந்த அணைக்கு வரும் 66 கன அடி நீரும் அப்படியே திறந்து விடப்படுகிறது. கடனாநதி அணை நிரம்பியதால் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் உபரி நீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது.

மழை அளவு

தென்காசி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
அடவிநயினார்-48, தென்காசி-27, ஆய்குடி-36, செங்கோட்டை-29, கருப்பாநதி- 64, கடனாநதி-12, ராமநதி-10, சங்கரன்கோவில்-62, சிவகிரி-22.


Next Story