கொரோனா தடுப்பூசி போடுபவர்களை ஊக்குவிக்க பட்டாசு, இனிப்பு பெட்டிகள் - சென்னை மாநகராட்சி நடவடிக்கை


கொரோனா தடுப்பூசி போடுபவர்களை ஊக்குவிக்க பட்டாசு, இனிப்பு பெட்டிகள் - சென்னை மாநகராட்சி நடவடிக்கை
x
தினத்தந்தி 31 Oct 2021 3:06 AM IST (Updated: 31 Oct 2021 3:06 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் கொரோனா தடுப்பூசி போடுபவர்களை ஊக்குவிக்க பட்டாசு, இனிப்பு பெட்டிகளை மாநகராட்சி அதிகாரிகள் வழங்கினர்.

சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி உத்தரவின்பேரில் மாநகராட்சி அதிகாரிகள், தடுப்பூசி குறித்து பொதுமக்களின் கவனத்தை ஈர்க்க ஒவ்வொரு முறையும் புதுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதிலும் கடந்த ஆண்டில் கொரோனா பாதிப்பு அதிகம் இருந்த ராயபுரம் மண்டலத்தில், மாநகராட்சி அதிகாரிகள் 100 சதவீத தடுப்பூசி என்ற இலக்கை நோக்கி தீவிர பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னையில், கடந்த வாரம் நடத்தப்பட்ட 6-வது மெகா முகாமின்போது, முதல் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு, குலுக்கல் முறையில் வெள்ளிக்காசு, குக்கர், நான் ஸ்டிக் தவா, ஹாட் பாக்ஸ், 3 லிட்டர் சமையல் எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்களை பொதுமக்களுக்கு வழங்கி மாநகராட்சி அதிகாரிகள் ஊக்குவித்தனர்.

இந்தநிலையில் சென்னையில் நேற்று 1,600 இடங்களில் 7-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட் அருகில் நேற்று நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில், பொதுமக்களின் ஆர்வத்தை மேலும் ஊக்குவிக்கும் வகையில், ராயபுரம் மண்டல உதவி சுகாதார அதிகாரி டாக்டர் வேல்முருகன் மேற்பார்வையில், சுகாதார ஆய்வாளர் அலெக்ஸ்பாண்டியன் தலைமையில், முதல் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு தீபாவளி பரிசாக பட்டாசு மற்றும் இனிப்பு பெட்டிகள் வழங்கப்பட்டது.

மாநகராட்சியின் இந்த புதுமையான நடவடிக்கைக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. இதனால் தடுப்பூசி போட மக்கள் ஆர்வத்துடன் அந்த முகாமில் குவிந்தனர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

ராயபுரத்தில் ஆரம்ப காலத்தில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகளவில் இருந்தது. தற்போது தடுப்பூசி உள்ளிட்ட தொடர் நடவடிக்கையின் மூலம், அங்கு முழுமையாக பாதிப்பு குறைக்கப்பட்டுள்ளது.

ராயபுரம் மண்டலத்தில் 5 லட்சத்து 21 ஆயிரத்து 876 பேர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதியானவர்களாக இருக்கின்றனர். அதில் 80 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். விரைவில் 100 சதவீதம் பேரும் தடுப்பூசி செலுத்திக்கொண்ட மண்டலமாக ராயபுரம் உருவாகும். தடுப்பூசியை மக்களிடையே ஊக்குவிப்பதற்குதான் இது போன்ற பரிசு பொருட்கள் வழங்கப்படுகிறது. ஆனாலும், தற்போது பொதுமக்களும் தடுப்பூசி போட அதிகளவில் ஆர்வம் வந்துள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story