ரெயிலில் பட்டாசு கொண்டு சென்றால் 3 ஆண்டு சிறை - ரெயில்வே பாதுகாப்புப்படை எச்சரிக்கை


ரெயிலில் பட்டாசு கொண்டு சென்றால் 3 ஆண்டு சிறை - ரெயில்வே பாதுகாப்புப்படை எச்சரிக்கை
x
தினத்தந்தி 31 Oct 2021 3:16 AM IST (Updated: 31 Oct 2021 3:16 AM IST)
t-max-icont-min-icon

தீபாவளியையொட்டி ரெயிலில் பட்டாசு கொண்டு சென்றால் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என பயணிகளுக்கு ரெயில்வே பாதுகாப்புப்படை போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை, 

தீபாவளி பண்டிகை நவம்பர் 4-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இந்தநிலையில், ரெயில்களில் செல்லும் பயணிகள், பட்டாசுக்களை கொண்டு செல்லக்கூடாது என்பதை அறிவுறுத்தி எழும்பூர் ரெயில்வே பாதுகாப்புப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவனேசன் தலைமையிலான பாதுகாப்புப்படை போலீசார், எழும்பூர் ரெயில் நிலையத்தில் நேற்று பயணிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் தீபாவளி என்றால் கொண்டாட்டம், பட்டாசு எடுத்து சென்றால் திண்டாட்டம் என்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களையும் பயணிகளிடம் வழங்கி, அவர்களின் உடைமைகளை போலீசார் சோதனை செய்தனர். சோதனையின்போது, ஒலிபெருக்கியின் மூலம், பயணிகள் யாரும் ரெயிலில் பட்டாசு எடுத்து செல்லக்கூடாது. மீறினால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் எச்சரித்தனர்.

மேலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் 100-க்கும் மேற்பட்ட ரெயில்வே பாதுகாப்புப்படை போலீசார் எழும்பூர் ரெயில் நிலையத்தில் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து ரெயில்வே பாதுகாப்புபடை போலீசார் கூறியதாவது:-

தீபாவளி பண்டிகை வருவதால், சொந்த ஊருக்கு செல்லும் பயணிகள் ரெயிலில் எளிதில் வெடிக்கக்கூடிய பட்டாசு பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது. இதனை மீறுவோர் மீது ரெயில்வே சட்டத்தின் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தீபாவளி பண்டிகையையொட்டி 24 மணி நேரமும் பாதுகாப்புப்பணியில் ஈடுபடும் வகையில் கூடுதல் ரெயில்வே பாதுகாப்புப்படை போலீசார் பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல் மின்சார ரெயிலிலும் பட்டாசுகளை பயணிகள் கொண்டு செல்வதை கண்காணிப்பதற்கும் தனி குழு அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story