ரெயில் டிக்கெட் எடுத்து தருவதாக பணம் பறிப்பு; வடமாநில கும்பல் கைது
சென்டிரல் ரெயில் நிலையத்தில் பயணிகளிடம் செல்போன் திருட்டிலும் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளது. அவர்களிடம் இருந்து 19 செல்போன்கள், ரூ.5 ஆயிரத்து 800 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்தவர் புடன்பகுடி (வயது 21). இவர், சென்னை தாம்பரம் பகுதியில் கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகிறார். அவர், தனது சொந்த ஊருக்கு செல்வதற்காக கடந்த 28-ந்தேதி சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு வந்தார். தற்போது ரெயிலில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் இல்லை என்பது தெரியாமல், டிக்கெட் எடுக்க சென்றார். ரெயில்வே ஊழியர்கள், முன்பதிவு இல்லா டிக்கெட் விற்பனை இல்லை என்று கூறியதையடுத்து அவர், என்ன செய்வது? என்று தெரியாமல், சோகத்துடன் டிக்கெட் கவுண்டர் அருகிலேயே அமர்ந்துள்ளார்.
அப்போது அவரிடம், “நாங்கள் ரெயில் டிக்கெட் எடுத்து தருகிறோம்” என்று ஆசை வார்த்தை கூறி அவரை 6 பேர் ஆட்டோவில் அழைத்து சென்றனர். சேப்பாக்கம் அக்பர் தெரு அருகே வைத்து அவரிடம் இருந்து ரூ.5 ஆயிரம் மற்றும் செல்போனை பறித்து சென்றுவிட்டனர்.
இதுகுறித்து புடன்பகுடி, திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில் இந்த வழக்கில் பீகார் மாநிலத்தை சேர்ந்த அமன்குமார் (23), ரபிகுமார் (22), சாஞ்சி மஹ்தோர் (36), மோஹித்குமார் (21), ராஜேஷ்குமார் (26), சுஷில்குமார் (22) ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் இவர்கள் 6 பேரும் சென்டிரல் ரெயில் நிலையத்தில் பயணிகளிடம் செல்போன் திருட்டிலும் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளது. அவர்களிடம் இருந்து 19 செல்போன்கள், ரூ.5 ஆயிரத்து 800 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story