திருவான்மியூர் போலீசார் சார்பில் காவலர் வீரவணக்க வாரம் கடைபிடிப்பு
நாடு முழுவதும் பணியின்போது உயிரிழந்த போலீசாருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அக்டோபர் 21-ந்தேதி அன்று காவலர் வீரவணக்க நாளாக அனுசரிக்கப்படுகிறது.
இந்தநிலையில் போலீஸ் பணியின் துணிவு, தியாகம், அர்ப்பணிப்பு உணர்வு உள்பட பெருமைகளை அனைவரும் அறிந்துகொள்ளும் வண்ணம், அக்டோபர் 21-ந்தேதி முதல் 31-ந்தேதி (இன்று) வரை காவலர் வீரவணக்க வாரமாக கடைபிடிக்க வேண்டும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.
அதன்படி ஒவ்வொரு போலீஸ்நிலையங்கள் சார்பில் காவலர் வீரவணக்க வாரம் கடைபிடிக்கப்பட்டு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் திருவான்மியூர் போலீஸ்நிலையம் சார்பில் அப்பகுதியில் உள்ள கடற்கரையில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
போலீஸ் பணியின் சவால்கள் குறித்து 2 நாடகங்கள் அரங்கேற்றப்பட்டன. ஒரு நாடகத்தில், சங்கிலி பறிப்பு குற்றவாளிகளை பிடிக்க செல்லும்போது போலீஸ்காரர் கத்தியால் குத்தப்பட்டு கொலையாவது போன்றும், மற்றொரு நாடகத்தில் குடும்பத்துடன் தீபாவளி பண்டிகையில் ஈடுபட்டிருந்த நேரத்தில் கலவரம் தொடர்பாக தகவலறிந்து சென்ற போலீஸ்காரர், கொலை செய்யப்படுவது போன்றும் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன.
இந்த நிகழ்ச்சியில் தரமணி உதவி கமிஷனர் ஜிவானந்தம், திருவான்மியூர் இன்ஸ்பெக்டர் ராமசுந்தரம் உள்பட போலீசார் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்பு பணிகளை திருவான்மியூர் போலீஸ்காரர் ராஜா செய்திருந்தார்.
Related Tags :
Next Story