வீடு தேடி கல்வி திட்டம் குறித்து கலை நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு


வீடு தேடி கல்வி திட்டம் குறித்து கலை நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு
x
தினத்தந்தி 31 Oct 2021 6:26 PM IST (Updated: 31 Oct 2021 6:26 PM IST)
t-max-icont-min-icon

கூடலூர், பந்தலூரில் வீடு தேடி கல்வி திட்டம் குறித்து கலை நிகழ்ச்சி மூலம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

கூடலூர்

கூடலூர், பந்தலூரில் வீடு தேடி கல்வி திட்டம் குறித்து கலை நிகழ்ச்சி மூலம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இல்லம் தேடி கல்வி

தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களிடையே கொரோனா காலத்தால் ஏற்பட்டு உள்ள கற்றல் இழப்பை ஈடுகட்டும் வகையில் இல்லம் தேடி கல்வி என்ற புதிய திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இத்திட்டம் முதற்கட்டமாக 12 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதிகளில் இல்லம் தேடி கல்வி திட்ட விழிப்புணர்வு கலைப்பயணம் 30 கிராமங்களில் தொடர்ந்து வருகிறது. அதில் பாட்டு, நாடகம், ஒயிலாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் மூலமாக விழிப்புணர்வு நடத்தப்பட்டு வருகிறது. 

விழிப்புணர்வு நிகழ்ச்சி

கூடலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் வீடு தேடி கல்வி திட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு திட்ட ஒருங்கிணைப்பாளர் அருண்குமார் தலைமை தாங்கினார். ஓய்வு பெற்ற தாசில்தார் ஜான் மனோகரன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் அய்யப்பன் தொடங்கி வைத்தார்.

பின்னர் மாணவர்களுக்கு கலை நிகழ்ச்சிகள் மூலம் வீடு தேடி கல்வி திட்டம் குறித்து விளக்கப்பட்டது. இதில் ஆசிரியர்கள், மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர். இதுகுறித்து வீடு தேடி கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளர் அருண்குமார் கூறியதாவது:-

கல்வி கற்கும் திறன்

கொரோனா காலத்தில் மாணவர்கள் வீடுகளில் முடங்கி இருந்தனர். அவர்கள் கல்வி பெறுவதில் தடை ஏற்பட்டது. ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்றாலும் கல்வி கற்கும் திறன் குறைந்தது. தற்போது கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வந்ததால், பள்ளிகள் திறக்கப்படுகிறது.

இதன் காரணமாக வீடு தேடி கல்வி திட்டம் மூலம் தன்னார்வலர்கள் உதவியுடன் மாணவர்கள் பள்ளிக்கு செல்வதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. குழந்தைகளின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு பள்ளிகளுக்கு பெற்றோர்அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார் .தொடர்ந்து புளியம்பாரா, தந்தட்டி, தருமகிரி ஆகிய இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


Next Story