தொடர் மழையால் நீர்வரத்து அதிகரிப்பு 62 அடியாக உயர்ந்த வைகை அணை நீர்மட்டம் விவசாயிகள் மகிழ்ச்சி
தொடர் மழையால் நீர்வரத்து அதிகரித்ததை தொடர்ந்து, வைகை அணை நீர்மட்டம் 62 அடியாக உயர்ந்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஆண்டிப்பட்டி:
தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக வைகை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான வருசநாடு, கம்பம், போடி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
இதேபோல் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் வைகை அணைக்கு அதிக நீர்வரத்து ஏற்பட்டு உள்ளது. வைகை அணையில் இருந்து ஏற்கனவே மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட முதல் போகம் மற்றும் ஒருபோக பாசனத்திற்காகவும், குடிநீர் தேவைக்காகவும் வினாடிக்கு 1,369 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
உயரும் நீர்மட்டம்
இந்தநிலையில் அணைக்கு வினாடிக்கு 2,078 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு திறக்கப்படும் தண்ணீரின் அளவை விட அணைக்கு கூடுதல் தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் வைகை அணை நீர்மட்டம் சீராக உயர்ந்து வருகிறது.
அதன்படி 71 அடி உயரம் கொண்ட வைகை அணை நீர்மட்டம் நேற்றுக்காலை 61.71 அடியில் இருந்து பிற்பகலில் 62 அடியை எட்டியது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் வைகை அணை நீர்மட்டம் மேலும் உயரும் வாய்ப்பு உள்ளது.
வைகை அணை நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story