தமிழகத்தில் தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்த வேண்டும். அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேட்டி


தமிழகத்தில் தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்த வேண்டும். அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேட்டி
x
தினத்தந்தி 31 Oct 2021 10:19 PM IST (Updated: 31 Oct 2021 10:19 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்த வேண்டும், என அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி கூறினார்.

வேலூர்

தமிழகத்தில் தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்த வேண்டும், என அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி கூறினார்.

முன்னாள் துணைவேந்தர் பேட்டி

வேலூரில் நடந்த கருத்தரங்கம் ஒன்றில் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். 
அப்போது பாலகுருசாமி கூறியதாவது:- 

தமிழகத்தில் பயிலும் மாணவர்களுக்கு நல்ல கல்வியை கொடுக்கவும், உலகத்தர கல்வியை அளிக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக மாணவ-மாணவிகளின் நலன் கருதி தேசிய கல்வி கொள்கையை தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும் தமிழகம் முழுவதும் நவோதயா பள்ளிகளை உடனடியாக தொடங்க வேண்டும்.

அதேபோன்று மாநிலத்தில் மும்மொழி கல்வி திட்டத்தை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும். இதில், தமிழ், ஆங்கிலத்தை தவிர மற்றொரு மொழியை மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான மொழியை தேர்வு செய்து கொள்ளலாம்.

கல்வியின் தரத்தை மேம்படுத்த...

தமிழக மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ள தயங்குகிறார்கள். நீட் தேர்வை யாராலும் ரத்து செய்ய முடியாது. ஓய்வுபெற்ற நீதிபதி ராஜன் தலைமையிலான குழு அளித்த அறிக்கையை மத்திய அரசு ஏற்க வாய்ப்பில்லை. தமிழக மாணவர்களின் எதிர்கால நலன் கருதி கல்வியின் தரத்தை மேம்படுத்த வேண்டும். பாடத்திட்டங்களை மாற்றியமைக்க வேண்டும். இதனை 10 ஆண்டுகளுக்கு முன்னரே மாற்றி அமைத்திருந்தால் மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் அடைந்திருப்பார்கள்.

மற்ற மாநிலங்களில் கல்வி வளர்ச்சிக்கு என்று குழு உள்ளது. அதேபோன்று தமிழகத்திலும் கல்விக்குழு ஒன்றை ஏற்படுத்த வேண்டும். தமிழகத்தில் இதேநிலை நீடித்தால் தமிழகத்தில் வழங்கப்படும் பட்டங்கள் பயனற்று போய்விடும். உயர் கல்வியில் ஆராய்ச்சிக்கு போதுமான நிதியை தமிழக அரசு ஒதுக்க வேண்டும். தமிழக அரசின் இல்லம் தேடி கல்வி நல்ல திட்டமாகும். தகுதியான அசிரியர்களை தேர்வு செய்து பள்ளிகளில் சிறப்பான கல்வி வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது தனியார் பள்ளிகளின் சங்கத்தலைவர் பழனிச்சாமி, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன்சம்பத், சிருஷ்டி பள்ளிகளின் குழும தலைவர் சரவணன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Next Story