பரவலாக மழை: வீடுகளில் முடங்கிய பொதுமக்கள் தீபாவளி விற்பனை பாதிப்பால் வியாபாரிகள் கவலை
கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால், பொதுமக்கள் வீடுகளில் முடங்கினர். தீபாவளி விற்பனை பாதிக்கப்பட்டதால் வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்.
கடலூர்,
கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கி பெய்து வருகிறது. இதற்கிடையில் வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. சில இடங்களில் கன மழையும் பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளம், குட்டைகள் நிரம்பி வருகின்றன.
இந்நிலையில் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதை ஒட்டிய இலங்கை கடற்கரையோர பகுதிகளில் நீடிக்கும் என்றும், அடுத்த 3 நாட்களுக்கு மேற்கு நோக்கி மெதுவாக நகரும் போது, வருகிற 3-ந்தேதி வரை சில மாவட்டங்களில் கன மற்றும் மிக கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
தீபாவளி பண்டிகை விற்பனை
அதன்படி கடலூர் மாவட்டத்தில் கடந்த 29-ந்தேதி இடைவிடாமல் மழை கொட்டியது. ஆனால் நேற்று முன்தினம் மழை ஓய்ந்து, வறண்ட வானிலையே நிலவியது.
நேற்று அதிகாலை 4 மணியளவில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து காலையில் சூரியன் சுள்ளென சுட்டெரித்தது. இதனால் மழை ஓய்ந்து விட்டது என்று கருதி, மக்களும் தீபாவளி பண்டிகைக்கான ஜவுளி எடுக்க படையெடுத்தனர்.
ஆனால், அது சிறிது நேரம் கூட நீடிக்கவில்லை. 10 மணிக்கு மேல் வானில் கருமேகங்கள் சூழ்ந்து மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து இடி, மின்னலுடன் கன மழையாக பெய்தது.
மாலை வரை தூறிக்கொண்டே இருந்தது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கும் நிலைக்கு ஆளானார்கள். எனவே தீபாவளி பண்டிகைகால புத்தாடைகள், பட்டாசு விற்பனை பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் வியாபாரிகள் கவலை அடைந்தனர்.
குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தது
தொடர் மழையால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. குறிப்பாக தாழ்வான குடியிருப்பு பகுதிகளை சுற்றிலும் மழைநீர் சூழ்ந்தது.
கடலூர் மஞ்சக்குப்பம் டவுன்ஹால் அருகில் உள்ள பஸ் நிறுத்தம் முன்பு மழைநீருடன், கழிவு நீரும் கலந்து நிற்கிறது. துர்நாற்றமும் வீசி வருவதால், பயணிகள் பஸ் நிறுத்தத்திற்கு செல்ல முடியாமல் சிரமப்பட்டனர்.
வடிகால் வசதியின்றி இருக்கும் கடலூர் குண்டு உப்பலவாடி, அழகப்பாநகர், பத்மாவதிநகர் உள்ளிட்ட பல்வேறு தாழ்வான இடங்களில் உள்ள குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்து நின்றது. இதனால் அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
மரம் சாய்ந்து விழுந்தது
இதேபோல் குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், விருத்தாசலம், வேப்பூர், குப்பநத்தம், ஸ்ரீமுஷ்ணம், காட்டுமன்னார் கோவில் என மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது. சில இடங்களில் கன மழையும் பெய்தது. தொடர் மழையால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகிறது.
இதனால் திருவந்திபுரத்தில் கெடிலம் ஆற்றின் குறுக்கே உள்ள தடுப்பணை நிரம்பி உள்ளது. அதேபோல் நெல்லிக்குப்பம் அருகே கடலூர் சாலையோரம் இருந்த வேப்பமரம் ஒன்று சாலையில் வேரோடு சாய்ந்து விழுந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இருப்பினும் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பரங்கிப்பேட்டையில் 54.3 மில்லி மீட்டர் மழை பெய்தது. குறைந்தபட்சமாக தொழுதூரில் 3 மில்லி மீட்டர் மழை பெய்தது.
மழை அளவு
மற்ற இடங்களில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
கடலூர்-21.8, கொத்தவாச்சேரி- 14, வடக்குத்து -13, கலெக்டர் அலுவலகம்-10.2, வானமாதேவி-10, அண்ணாமலைநகர்-9.8, லால்பேட்டை- 9, காட்டுமன்னார்கோவில்-8.3, லக்கூர்- 8.3, புவனகிரி -7, சிதம்பரம்- 6.8, பெலாந்துறை- 6.2, பண்ருட்டி, விருத்தாசலம், வேப்பூர், மே.மாத்தூர் தலா 6, குப்பநத்தம் -5.4, குடிதாங்கி -5, சேத்தியாத்தோப்பு-4.6, ஸ்ரீமுஷ்ணம்-4.2, கீழ்செருவாய் -4, காட்டுமயிலூர்-4, தொழுதூர்-3
Related Tags :
Next Story