புகார்பெட்டி


புகார்பெட்டி
x
தினத்தந்தி 31 Oct 2021 10:46 PM IST (Updated: 31 Oct 2021 10:46 PM IST)
t-max-icont-min-icon

புகார்பெட்டி

தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரம் திருக்குளவீதியில் உயர் மின்னழுத்த கம்பிகள் மிகத் தாழ்வாகவும், மரங்களுக்கு இடையேயும் செல்கிறது. மழைக்காலம் என்பதால் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் அச்சம் உள்ளது. இதுகுறித்து பலமுறை மரத்தின் உரிமையாளருக்கும், மின்வாரியத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தும் சரி செய்யவில்லை. மின்வாரியத்துறை அதிகாரிகள் கவனிப்பார்களா?
-பாலாஜி, விரிஞ்சிபுரம்.

வடிகால் வசதி தேவை

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் ஒரு தியேட்டர் பின்பக்கம் கலைஞர்நகர் பஸ் நிலையத்துக்கு செல்லும் வழியில் வடிகால வசதி இல்லாததால் ஆங்காங்கே மழைநீர் தேங்கி உள்ளது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே தேங்கிய மழைநீரை வடிய வைக்கவும், அந்தப் பகுதியில் வடிகால் வசதி செய்து கொடுக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆ.ராஜேந்திரன், காவேரிப்பாக்கம்.

குப்பைகளால் சுகாதார  சீர்கேடு

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அர்த்தநாரீஸ்வரர் கோவில் எதிரில் சாலையோரம் குப்பைகள் கொட்டப்படுகிறது. அந்தக் குப்பைகளை தினமும் அகற்றாமல் விட்டு விடுகிறார்கள். இதனால் நாய், ஆடு, மாடுகள் அங்கு வந்து குப்பைகளை கிளறி இரைதேடுவதால் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரச் சீர்கேடும் ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தினமும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முருகன், திருவண்ணாமலை. 

குண்டும் குழியுமான சாலை

ராணிப்பேட்டை வக்கீல் தெருவில் இருந்து பிஞ்சி வழியாக ராணிப்பேட்டை பை-பாஸ் செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. அந்த வழியாக தோல் தொழிற்சாலைகளுக்கு செல்லும் தொழிலாளர்கள், பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை சீர் செய்ய வேண்டும்.
-ஜோதிநாதன், வக்கீல் தெரு ராணிப்பேட்டை. 

பள்ளியை சீர் செய்ய வேண்டும்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா மேல்கொளத்தூர் ஊராட்சியில் உள்ள தொடக்கப்பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். தற்போது மழை பெய்தால் பள்ளியின் உள்ளே கசிவு ஏற்பட்டு தண்ணீர் தேங்கும். இதனால் மாணவர்கள் தரையில் அமர்ந்து படிக்க முடியுமா? எனத் தெரியவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பள்ளியை சீர் செய்ய வேண்டுகிறேன்.
-கோ.மகாலட்சுமிசத்தியராஜ், ஊராட்சி மன்ற தலைவர்.

சேதமான மின்கம்பம்

வேலூர் காட்பாடி வெண்மணி நகர் பகுதியில் மின்கம்பத்தின் கீழே அடிபாகம் உதிர்ந்து சேதமாகி உள்ளது. அந்த மின்கம்பம் எந்த நேரத்திலும் கீழே விழும் அபாயம் உள்ளது. ஆபத்து ஏற்படும் முன் இரும்பு மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பம் நிறுவ வேண்டும்.
-அய்யப்பன், வேலூர். 

Next Story