தமிழகத்தில் இந்து கோவில்களின் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது-எச்.ராஜா குற்றச்சாட்டு
தமிழகத்தில் இந்து கோவில்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவதாக பா.ஜனதா முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.
பெரம்பலூர்,
பயிற்சி கூட்டம்
பா.ஜனதா நிர்வாகிகளுக்கான பயிற்சி கூட்டம் பெரம்பலூரில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சியின் முன்னாள் தேசிய செயலாளரும், மூத்த தலைவருமான எச்.ராஜா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த 5½ மாதங்களாக இந்து கோவில்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில், கடம்பூர் ஒன்றியத்தில் மலைமேல் இருக்கிற அம்மன் கோவிலை வன்முறையாளர்கள் தாக்கினார்கள். இதற்காக, இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. அதற்கு அடுத்து சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலின் உபகோவிலில் 2 முறை சாமி சிலைகள் உடைக்கப்பட்டுள்ளன.
அறங்காவலர்கள் குழு
இதிலும் அரசாங்கம் சரியான நபரை கண்டுபிடித்து கைது செய்யவில்லை. யாரோ ஒரு மனநோயாளியை கைது செய்து விட்டுள்ளனர். அரசுக்கு உண்மையான குற்றவாளியை கைது செய்து தண்டிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாததையே இது காட்டுகிறது.
முதல்வர் அறிவித்த அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தின் கீழ் நியமனங்களும் செல்லாது. அது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது. எந்த ஒரு ஆகம விதியையும் மீறக்கூடாது. அரசு அறங்காவலர்களை நியமிக்க வேண்டும், அர்ச்சகர்கள் அறங்காவலர்கள் குழுவினால் நியமிக்கப்பட வேண்டும். இதுவே தீர்ப்பு வந்த மாதிரி தான். அரசு செய்தது சட்ட விரோதமானது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
போராட்டம் நடத்தப்படும்
அரசின் சட்ட விரோத நடவடிக்கை எதிராக, முதன் முதலில் புகார் கொடுத்தது சிறுவாச்சூர் கோவில் பூசாரிகள். இதனால், பாதிக்கப்படுகிற அறநிலையத்துறை அதிகாரிகள், அலுவலர்கள் தூண்டுதலில் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலின் உபகோவிலில் சாமி சிலைகள் உடைக்கப்பட்டு இருக்குமா? என ஒரு சந்தேகம் வருகிறது. அந்த கோணத்திலும் போலீசார் விசாரிக்க வேண்டும். உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் இல்லையென்றால், தமிழகம் முழுவதும் இந்து கோவில் முன்பு போராட்டம் நடத்தப்படும். அறநிலையத்துறை செயல்படாத துறையாகவே உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story