தஞ்சை மாவட்டத்தில் பரவலாக மழை
தஞ்சை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக அணைக்கரையில் 28 மி.மீட்டர் பதிவானது.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக அணைக்கரையில் 28 மி.மீட்டர் பதிவானது.
பரவலாக மழை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. வங்கக்கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அறிவித்தது. இந்தநிலையில் தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
தஞ்சை மாநகரில் நேற்றுகாலை முதல் இடைவிடாமல் மழை பெய்து கொண்டே இருந்தது. மதியம் திடீரென பலத்த மழை பெய்தது. இந்த பலத்த மழை சிறிதுநேரம் நீடித்தது. பிற்பகல் 3 மணிக்கு பிறகு மழை நின்றது. இந்த மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
குடைபிடித்து வந்த மக்கள்
தொடர் மழையின் காரணமாக வீட்டை விட்டு வெளியே வந்தவர்கள் குடைகள் பிடித்தபடியும், மழை கோட்டு அணிந்தபடியும் வந்தனர். தஞ்சை மாநகரில் பழைய பஸ் நிலையம் எதிரே, மேரீஸ்கார்னர், ராமநாதன் பஸ் நிறுத்தம் உள்ளிட்ட பல பகுதிகளில் பயணிகள் நிழற்குடை இல்லாத காரணத்தினால் மக்கள் மழையில் நனைந்தபடியும், குடைகளை பிடித்தபடியும் பஸ்சிற்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
தஞ்சை சாந்தப்பிள்ளை கேட் பகுதியில் ரெயில்வே கீழ்பாலத்தில் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் அந்த வழியாக மக்கள் நடந்து செல்லவும், வாகனங்களில் செல்லவும் முடியவில்லை. மேரீஸ்கார்னர் வழியாக தான் பூச்சந்தை, விளார் சாலைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. சிலர், ரெயில்வே தண்டவாளத்தை கடந்து செல்லக்கூடிய அபாய நிலையும் உள்ளது.
மழைஅளவு
தஞ்சை மாவட்டம் முழுவலும் பல்வேறு இடங்களில் இதுபோன்று மழை பெய்தது. தற்போது குறுவை அறுவடை பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கனவே மழை தண்ணீர் தேங்கி நிற்கக்கூடிய வயல்களில் அறுவடை பணி செய்ய முடியவில்லை. அவர்கள் தண்ணீரை வடிய வைக்கும் முயற்சியில் ஈடுபட்ட நிலையில் இடைவிடாது பெய்த மழையினால் மேலும் பாதிப்பு அதிகமானது.
தஞ்சை மாவட்டத்தில் நேற்றுகாலை 7 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழைஅளவு மில்லிமீட்டரில் வருமாறு:-
அணைக்கரை-28, பட்டுக்கோட்டை-25, நெய்வாசல்தென்பாதி-23, மதுக்கூர்-20, அதிராம்பட்டினம்19, திருவிடைமருதூர்-14, வெட்டிக்காடு-9, கும்பகோணம்-8, பாபநாசம்-8, திருவையாறு-8, தஞ்சை-7, ஈச்சன்விடுதி-7, திருக்காட்டுப்பள்ளி-6, மஞ்சளாறு-6, பூதலூர்-5, வல்லம்-4, பேராவூரணி-4, குருங்குளம்-3, கல்லணை-3, ஒரத்தநாடு-2.
Related Tags :
Next Story