புகார் பெட்டி


புகார் பெட்டி
x
தினத்தந்தி 1 Nov 2021 2:34 AM IST (Updated: 1 Nov 2021 2:34 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான புகார்கள் வருமாறு:-

ஊருணி தூர்வாரப்படுமா? 
ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரியபட்டினம் மேற்கு தெருவில் சுல்தான் அப்பா ஒலியுல்லாஹ் தர்கா அருகில் கோட்டைகுளம் என்ற ஊருணி உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இந்த ஊருணி தூர்வாரப்படவில்லை. தற்போது இது மாசடைந்து காணப்படுகிறது. துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் ஊருணியை தூர்வார உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 
சீனிஜலாலுதீன், பெரியபட்டினம். 
குடிநீர் இணைப்பு தேவை 
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சி 11-வது வார்டு செக்குகார காம்பவுண்டில் 40 வீடுகள் உள்ளன. ஆனால் இப்பகுதியில் குடிநீர் குழாய் இணைப்புகள் இ்ல்லை. இதனால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். குடிநீர் பிடிக்க அருகில் உள்ள பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. பொதுமக்களின் நலன்கருதி இப்பகுதியில் குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும். 
அகமதுபாசில், ஆர்.எஸ்.மங்கலம். 
கிடப்பில் போடப்பட்ட சாலை பணி 
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா குன்றக்குடி ஊராட்சியில் சரவணா நகர் பகுதியில் சாலை பணி 2 மாதமாக நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. சாலையோரத்தில் ஜல்லி கற்களை குவித்து வைத்த நிலையில் பல மாதமாக உள்ளது. இதனால் வாகனங்கள் அவ்வழியாக செல்ல முடியாத நிலை உள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலை பணியை முடுக்கி விட வேண்டும். 
ராம், திருப்பத்தூர். 
சாலை சீரமைக்கப்படுமா? 
ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா ஆனந்தூர் அருகே ஆய்ங்குடி கிராமத்தில் மாரியம்மன் கோவிலுக்கு செல்லும் சாலை மிக மோசமான நிலையில் குண்டும், குழியுமாக உள்ளது. இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இரவு நேரத்தில் பள்ளம், மேடு இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர். வாகன ஓட்டிகளின் நலன்கருதி சாலையை சீரமைப்பார்களா? 
சுகுமார், ஆய்ங்குடி. 
நாய்கள் தொல்லை 
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சம்மந்தபுரம் குறிஞ்சி நகர், கீழத்தைக்கா, மேலப்பள்ளி பகுதி, ஆயிஷா பள்ளி பகுதி என அனைத்து பகுதிகளிலும் தெருநாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றி திரிகின்றன. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அச்சத்தில் உள்ளனர். நாய்க்கடியால் தினமும் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பொதுமக்களின் நலன்கருதி தொல்லை தரும் தெருநாய்களை பிடிக்க வேண்டும். 
முகமது மரைக்காயர், ராஜபாளையம். 
சேறும், சகதியுமான சாலை 
மதுரை 21-வது வார்டு பெத்தானியாபுரம் மேட்டுத்தெரு, திலிபன் தெரு பகுதியில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் தற்போது பெய்த மழை காரணமாக சாலை சேறும், சகதியுமாக மாறிவிட்டது. அதில் பொதுமக்கள் நடந்து கூட செல்ல முடியாத நிலை உள்ளது. இருசக்கர வாகன ஓட்டிகளும் இந்த சாலையில் செல்லும் போது வழுக்கி விழும் நிலை காணப்படுகிறது. எனவே, இங்கு சாலை அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
ஆனந்த், மதுரை.
வாகன ஓட்டிகள் அவதி 
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தாலுகா வில்லிபத்திரி ஊராட்சி சின்னவள்ளிக்குளம் கிராமத்தில் இருந்து விருதுநகர் செல்லும் சாலையானது குண்டும், குழியுமாக உள்ளது. இந்த வழியாக பயணம் செய்யும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. மேலும், குண்டும், குழியுமான இந்த சாலையில் செல்லும் போது வாகனங்களும் அடிக்கடி பழுதாகி விடுகிறது. இந்த சாலையை எப்போது சீரமைப்பார்களோ? 
பவி, வில்லிபத்திரி.
சாலையில் நிற்கும் மாடுகளால் விபத்து
மதுரை குலமங்கலம் சாலையில் ஆனையூர் அய்யனார் கோவில் அருகில் ஏராளமான மாடுகள் சாலையின் நடுவில் நிற்கின்றன. இரவு நேரங்களில் இந்த மாடுகள் சாலையின் மையப்பகுதியில் நிற்பது தூரத்தில் இருந்து வேகமாக வரும் வாகன ஓட்டிகளுக்கு தெரிவதில்லை. இதனால் அந்த இடத்தில் அடிக்கடி விபத்து நடக்கிறது. இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் மாடுகள் மீது மோதி படுகாயம் அடைகின்றனர். அந்த மாடுகளை அப்புறப்படுத்த மதுரை மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிரசாத், பூ.லட்சுமிபுரம்.

Next Story