டீசல் விலை உயர்வை கண்டித்து மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு விரைவில் போராட்டம்-லாரி உரிமையாளர்கள் சங்க மாநில தலைவர் பேட்டி
டீசல் விலை உயர்வை கண்டித்து மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்று சேலத்தில் மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் குமாரசாமி தெரிவித்தார்.
சேலம்:
டீசல் விலை உயர்வை கண்டித்து மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்று சேலத்தில் மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் குமாரசாமி தெரிவித்தார்.
பதவியேற்பு விழா
சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க 73-வது வருடாந்திர மகாசபை கூட்டம், 2021-2024-ம் ஆண்டுக்கான சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு சேலம் அருகே நெய்க்காரப்பட்டி பொன்னாக்கவுண்டர் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.
இதில், மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க புதிய தலைவராக தனராஜ், செயலாளராக குமார், பொருளாளராக செந்தில்குமார் மற்றும் கவுரவ தலைவராக கிருஷ்ணசாமி ஆகியோர் பதவி ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து புதிய தலைவர் தனராஜ் சங்க வளர்ச்சி பணிகள் குறித்து பேசினார்.
பேட்டி
விழாவில் பங்கேற்ற மாநில லாரி உரிமையாளர் சம்மேளன தலைவர் குமாரசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதனால் லாரி உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். டீசல் விலை உயர்வை கண்டித்து விரைவில் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு போராட்டம் நடத்தப்படும். சரக்கு ஏற்றுக்கூலி, இறக்கு கூலியில் பிரச்சினை இருந்து வருகிறது. இது தொடர்பாக 9-ந் தேதி விழுப்புரத்தில் நடக்கும் வணிகர்கள் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜாவுடன் ஆலோசனை செய்து தீர்வு காணப்படும்.
டீசல் விலை
லாரி தொழிலை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கவே டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தி வருகிறது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு லாரி தொழிலை தாரை வார்த்துவிட்டால் அவர்கள் நிர்ணயிப்பதுதான் கட்டணம். இதனால் பல லட்சம் லாரி உரிமையாளர்கள் பாதிக்கப்படுவார்கள். எங்கள் கோரிக்கையை பரிசீலித்து டீசல் விலையை கட்டுக்குள் கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், விலையை திரும்ப பெற வலியுறுத்தியும் தென்னிந்திய அளவில் லாரிகள் வேலை நிறுத்தம் செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. அதன்முடிவு அறிவித்தவுடன் தமிழகத்திலும் லாரிகள் வேலை நிறுத்தம் தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்படும்.
இவ்வாறு குமாரசாமி கூறினார்.
Related Tags :
Next Story