வேளாண் காடுகள் இயக்க திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 1½ லட்சம் மரக்கன்றுகள்
வேளாண் காடுகள் இயக்க திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 1½ லட்சம் மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்படும் என்று கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்தார்.
விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்
செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விவசாயிகளிடமிருந்து நேரடியாக மனுக்களை பெற்று உடனடியாக தீர்வு காண உத்தரவிட்டார். பின்னர் அவர் பேசியதாவது:-
செங்கல்பட்டு மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் (2021-22) சொர்ணவாரி பருவத்தில் 10099 ஹெக்டேர் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் நெல் சொர்ணவாரி பருவத்தில் (2021) விஞ்ஞான முறைப்படி தேர்வு செய்யப்பட்டு 31 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
உணவு தானிய உற்பத்தி இயக்கம் 2021-22-ம் ஆண்டில் உற்பத்தி திறனை அதிகரிக்க புதிய தொழில்நுட்ப முறைகள் கையாளப்பட்டு வருகிறது. உணவு தானிய உற்பத்தியில் தமிழ்நாடு தன்னிறைவு அடைய தரிசு நிலத்தை சாகுபடி நிலமாக மாற்ற விவசாயிகள் ஒத்துழைக்க வேண்டும். தண்ணீர் பற்றாக்குறை இருக்கும் இடங்களில் சிறுதானிய பயிர்கள் மற்றும் பயறுவகை பயிர்களை அதிக அளவில் பயிர் செய்து உற்பத்தி திறனை அதிகரிக்க வேண்டும்.
அனைத்து கிராம வேளாண்மை வளர்ச்சி திட்டம்
பாசனநீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக மகசூல் பெற நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் சொட்டுநீர்ப்பாசனம், மழைத்தூவான் மற்றும் தெளிப்பு நீர் பாசனம் போன்றவை முழு மானியமாக சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியம் வழங்கப்பட்டு வருகிறது.
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் அனைத்து கிராம வேளாண்மை வளர்ச்சி திட்டம் 2021-2022 செங்கல்பட்டு மாவட்டத்தில் நடப்பாண்டு முதல் செயல்படுத்தப்பட இருக்கிறது. இந்த திட்டத்தில் நடப்பு 2021-22-ம் ஆண்டில் 53 கிராம பஞ்சாயத்துகள் அரசால் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கிராம பஞ்சாயத்துக்களில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் என்ஜினீயரிங் வேளாண் விற்பனை மற்றும் வணிகம், மீன்வளம், வனம், ஊரகவளர்ச்சி, கூட்டுறவு, விதைச்சான்று, விதை ஆய்வு, முன்னோடி வங்கி மற்றும் கூட்டுறவு சர்க்கரை ஆலை போன்ற துறைகளின் கீழ் அரசு நலத்திட்டங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்தும் பொருட்டு மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.
உழவன் செயலி
தமிழ்நாடு நிலைக்கத்தக்க பசுமை போர்த்திய வேளாண் காடுகள் இயக்க திட்டத்தின் மூலம் செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு 1½ லட்சம் மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்படவுள்ளது. இந்த மரக்கன்றுகள் மாவட்ட வனத்துறை (உத்திரமேரூர்) மூலம் விவசாயிகளுக்கு வழங்க தயார் நிலையில் உள்ளது. தேவைப்படும் விவசாயிகள் உழவன் செயலியில் தங்களின் விவரங்களை முன்பதிவு செய்து பயன் பெறலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வகுமார், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் செல்வம், இணை இயக்குனர், (வேளாண்மை) சுரேஷ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) தியாகராஜன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story