வரைவு பட்டியல் வெளியீடு தேனி மாவட்டத்தில் 11¼ லட்சம் வாக்காளர்கள்


வரைவு பட்டியல் வெளியீடு தேனி மாவட்டத்தில் 11¼ லட்சம் வாக்காளர்கள்
x
தினத்தந்தி 1 Nov 2021 4:22 PM IST (Updated: 1 Nov 2021 4:22 PM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் மாவட்டத்தில் 11¼ லட்சம் வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.


தேனி:

தேனி மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இந்த பட்டியலை மாவட்ட கலெக்டர் முரளிதரன் வெளியிட்டார். அதை, பெரியகுளம் சப்-கலெக்டர் ரிஷப், உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. கவுசல்யா ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
வரைவு வாக்காளர் பட்டியலின் படி தேனி மாவட்டத்தில் மொத்தம் 11 லட்சத்து 27 ஆயிரத்து 932 வாக்காளர்கள் உள்ளனர். அதில், ஆண்கள் 5 லட்சத்து 53 ஆயிரத்து 059 பேர், பெண்கள் 5 லட்சத்து 74 ஆயிரத்து 678 பேர், மூன்றாம் பாலினத்தவர்கள் 195 பேர் உள்ளனர்.
தொகுதி வாரியாக....
சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்காளர்கள் விவரம் வருமாறு:-
ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 36 ஆயிரத்து 926 ஆண்கள், 1 லட்சத்து 40 ஆயிரத்து 418 பெண்கள், 34 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 2 லட்சத்து 77 ஆயிரத்து 378 வாக்காளர்கள் உள்ளனர். பெரியகுளம் (தனி) சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 39 ஆயிரத்து 775 ஆண்கள், 1 லட்சத்து 45 ஆயிரத்து 325 பெண்கள், 105 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 2 லட்சத்து 85 ஆயிரத்து 205 வாக்காளர்கள் உள்ளனர்.
போடி சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 950 ஆண்கள், 1 லட்சத்து 42 ஆயிரத்து 8 பெண்கள், 20 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 2 லட்சத்து 77 ஆயிரத்து 978 வாக்காளர்கள் உள்ளனர். கம்பம் சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 40 ஆயிரத்து 408 ஆண்கள், 1 லட்சத்து 46 ஆயிரத்து 927 பெண்கள், 36 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 2 லட்சத்து 87 ஆயிரத்து 371 வாக்காளர்கள் உள்ளனர்.
சிறப்பு சுருக்கத் திருத்தப் பணி
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது குறித்து கலெக்டர் முரளிதரன் நிருபர்களிடம் கூறுகையில், "இந்த வாக்காளர் பட்டியல் அனைத்து வர்காகளர் பதிவு அலுவலர் அலுவலகம், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்கள், நிர்ணயிக்கப்பட்ட அனைத்து வாக்குச்சாவடி மையங்கள் மற்றும் குடியிருப்போர் நலச்சங்கங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும். பொதுமக்கள் தங்களின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்கள் சரியாக உள்ளதா? என சரிபார்த்துக் கொள்ளலாம். அதுபோல், இன்று (நேற்று) முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த பணிகள் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நடக்கிறது. மேலும் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் தொடர்பான விண்ணப்பங்களை பெற வருகிற 13, 14-ந்தேதிகள் மற்றும், 27, 28-ந்தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடக்கின்றன" என்றார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ரமேஷ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) விமலாராணி, தேர்தல் பிரிவு தாசில்தார் பாலசண்முகம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.



Next Story