தூத்துக்குடியில் தாழ்வான 25 இடங்களில் அதிக திறன்கொண்ட மோட்டார் மூலம் மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்
தூத்துக்குடியில் தாழ்வான 25 இடங்களில் அதிக திறன்கொண்ட மோட்டார் மூலம் மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் தாழ்வான 25 இடங்களில் அதிக திறன் கொண்ட மோட்டார்கள் மூலம் மழைநீர் அகற்றப்பட்டு வருகிறது என்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் கூறினார்.
இதுகுறித்து அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
வடகிழக்கு பருவமழை
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாள் முதல் அனைத்து துறை அலுவலர்களையும் தயார்படுத்தி உள்ளோம். இதனால் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கான இடங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.
தாழ்வான பகுதிகளில் தேங்கும் மழைநீரை வெளியேற்றுவதற்கான மோட்டார்கள், பொக்லைன் எந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. தூத்துக்குடி நகர்ப்புறத்தில் கடந்த 3 நாட்கள் பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனை போர்க்கால அடிப்படையில் வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதிநவீன மோட்டார்கள்
தூத்துக்குடி மாநகராட்சியில் 37 மோட்டார்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு 25 தாழ்வான பகுதிகள் கண்டறியப்பட்டு, அந்த இடங்களில் சம்ப் அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு நிரந்தரமாக சென்சார் மூலம் இயங்கக்கூடிய 40 முதல் 50 எச்.பி. அதிக திறன் கொண்ட மோட்டார்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இதில் 19 இடங்களில் மோட்டார்கள் இயக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 6 மோட்டார்கள் இன்று (அதாவது நேற்று) முதல் இயக்கப்பட உள்ளன. இந்த மோட்டார்களில் சென்சார் பொருத்தப்பட்டு உள்ளதால், தண்ணீர் தேங்கினால் உடனடியாக மோட்டார் இயங்கும். தண்ணீர் குறைந்த பிறகு தானாக மோட்டார் நின்றுவிடும்.
பாதாள சாக்கடை திட்டத்தில் 5 துணை பம்பிங் நிலையங்கள் மூலம் தண்ணீரை பம்பிங் செய்து வெளியேற்றி வருகிறோம். சிறிய தெருக்களில் டேங்கர் லாரி மூலம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதுதவிர 180 மோட்டார்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.
உப்பாற்று ஓடை மூலம்...
ஸ்டேட் வங்கி காலனி, பிரையண்ட்நகர் ஆகிய பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த வடிகால் மூலமும் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதே போன்று தூத்துக்குடி நகருக்கு வெளியில் இருந்து வரும் தண்ணீர் நகருக்குள் வராமல் உப்பாற்று ஓடை வழியாக கடலுக்கு செல்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது.
தாமிரபரணி ஆற்றுப்பாசனத்தில் உள்ள கடம்பா குளம் நிரம்பி, உபரி நீர் வெளியேறிக் கொண்டு இருக்கிறது. இதைத்தொடர்ந்து பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் குளங்களில் ஏதேனும் உடைப்பு ஏற்படுகிறதா என்பதை கண்காணித்து வருகின்றனர். குளங்களில் உடைப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டால் உடனடியாக மணல் மூட்டைகளை அடுக்கி தடுப்பதற்கான ஏற்பாடுகளை செய்து உள்ளனர். மழை காரணமாக வீடு சேதம் அடைந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் மூலம் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்
Related Tags :
Next Story