தொழிலாளர்களுக்கு சம்பள பாக்கி


தொழிலாளர்களுக்கு சம்பள பாக்கி
x
தினத்தந்தி 1 Nov 2021 5:45 PM IST (Updated: 1 Nov 2021 5:45 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் சுற்றுப்புற பகுதிகளில் ஊரக வேலை உறுதி திட்ட தொழிலாளர்களுக்கு சம்பள பாக்கியை விரைந்து வழங்க வேண்டும் என்று கலெக்டரிடம் நேற்று மனு கொடுத்து முறையிட்டனர்.

திருப்பூர்,
திருப்பூர் சுற்றுப்புற பகுதிகளில் ஊரக வேலை உறுதி திட்ட தொழிலாளர்களுக்கு சம்பள பாக்கியை விரைந்து வழங்க வேண்டும் என்று கலெக்டரிடம் நேற்று மனு கொடுத்து முறையிட்டனர்.
வேகத்தடை வேண்டும்
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை நடைபெற்றது.  கலெக்டர் வினீத் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுக்கள் மூலமாக கொடுத்தனர். மொத்தம் 207 மனுக்கள் பெறப்பட்டன. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மனுக்களுக்கு தீர்வு காண உத்தரவிடப்பட்டது. இதில் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் குமரேசன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
பல்லடம் அருகே நாரணாபுரம் கல்லம்பாளையத்தை சேர்ந்த மக்கள் அளித்த மனுவில், பல்லடத்தில் இருந்து அவினாசி செல்லும் நெடுஞ்சாலையில் கல்லம்பாளையம் பகுதி உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக வாகனங்களில் அதிவேகமாக அந்த வழியாக செல்கிறார்கள். இதன்காரணமாக மிகப்பெரிய விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகளும் அதிகரிக்கிறது. மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் வாகனங்களின் வேகத்தை குறைப்பதற்கு வேகத்தடை அமைக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
ராஜவாய்க்காலில் தண்ணீர்
காங்கேயம் அருகே பாலசமுத்திரம்புதூரை சேர்ந்த கந்தாங்கண்ணி ராஜவாய்க்கால் மதகு பாசன விவசாயிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது
கந்தாங்கண்ணி ராஜவாய்க்காலின் மதகு வழியாக வரும் தண்ணீரை பயனன்படுத்தி விவசாயம் செய்து வந்தோம். ராஜவாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி நடைபெற்றதால் தண்ணீர் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் பணி நடைபெற்று 2 ஆண்டுகளாக விவசாயம் செய்ய முடியாமல் போய்விட்டது. தற்போது அந்த பணி நிறைவடைந்து 6 மாதங்கள் ஆன நிலையில் இன்னும் அந்த வாய்க்காலில் தண்ணீரை திறந்து விடவில்லை.
இதனால் எங்கள் விவசாய நிலங்களில் தென்னை மற்றும் கால்நடை தீவனம் உற்பத்தி செய்ய முடியாமல் கடுமையாக பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறோம். எனவே ராஜவாய்க்காலில் தண்ணீர் திறந்து விட ஏற்பாடு செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.
சாலையோரம் ஆக்கிரமிப்பு
உடுமலை போடிப்பட்டி, அம்மாபட்டியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட பெண்கள் அளித்த மனுவில், நாங்கள் கூலி வேலை செய்து வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். எங்களுக்கு சொந்தமாக வீடு, நிலம் இல்லை. எங்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கி உதவ வேண்டும் என்று கூறியுள்ளனர்.
குண்டடம் ஒன்றியம் ஜோதியம்பட்டி ஊராட்சி தலைவர் மயிலான் அளித்த மனுவில், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பொம்மநாயக்கன் தோட்டம் முதல் ராமநாதபுரம் செல்லும் மண் சாலையை கப்பி சாலையாக அமைக்க நிர்வாக அனுமதி பெற்று அமைச்சர்கள் பூமி பூஜை செய்து வைத்தார்கள். சாலையின் இருபுறமும் தனியார் ஆக்கிரமிப்பு இருப்பதால் சாலையை அளவீடு செய்து கொடுக்க பணம் செலுத்தி விண்ணப்பித்தும் நில அளவையர்கள் வராமல் உள்ளனர். சாலைப்பணியை விரைந்து முடிக்க அளவீடு செய்து கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
 சம்பளம் பாக்கி
திருப்பூர் தொட்டிய மண்ணரை ரோஜா நகர் பகுதியை சேர்ந்த மக்கள் அளித்த மனுவில், தொட்டிய மண்ணரையில் இருந்து ரோஜா நகருக்கு செல்லும் சாலையில் கழிவுநீர் தேங்கியுள்ளது. இதனால் கொசு உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. குப்பையும் அதிகம் தேங்கிக்கிடக்கிறது. எனவே சாலையில் கழிவுநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
திருப்பூர், அவினாசி பகுதியை சேர்ந்த தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள், அருந்ததியர் இளைஞர் முன்னணி நிர்வாகிகளுடன் வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:
திருப்பூர் மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு சரிவர சம்பளம் வழங்குவதில்லை. பொங்கலூர், பல்லடம், ஊத்துக்குளி, அவினாசி பகுதிகளில் கடந்த 3 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை. தீபாவளி பண்டிகை காலம் என்பதால் வேலை செய்யும் ஏழை தொழிலாளர்களுக்கு பயன்படும் வகையில் சம்பளத்தை வழங்க கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.


Next Story