தூத்துக்குடி, திருச்செந்தூர் பகுதியில் கனமழை பெய்து வருவதால் நகரிலுள்ள முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கி பொதுமக்கள் அவதி


தூத்துக்குடி, திருச்செந்தூர் பகுதியில் கனமழை பெய்து வருவதால் நகரிலுள்ள முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கி பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 1 Nov 2021 1:33 PM GMT (Updated: 1 Nov 2021 1:33 PM GMT)

தூத்துக்குடி, திருச்செந்தூர் பகுதியில் கனமழை பெய்து வருவதால் நகரிலுள்ள முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கி பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் 4-வது நாளாக நேற்று மழை நீடித்தது. தூத்துக்குடி, திருச்செந்தூரிலுள்ள முக்கிய சாலைகள், தெருக்களில் மழைநீர் தேங்கி கிடப்பதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மழை நீரை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தொடர் மழை
வங்கக்கடலில் கன்னியாகுமரி மற்றும் இலங்கையை ஒட்டி நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. நேற்று காலை முதல் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. ஆனால் அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்தது. தூத்துக்குடி உள்ளிட்ட சில இடங்களில் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. தொடர்ந்து மழைநீரை அகற்றும் பணிகளில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
சாலை மறியல்
மேலும் தூத்துக்குடி அருகே உள்ள கோரம்பள்ளம் பி.எஸ்.பி.நகர் பகுதியில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்தது. தெருக்கள் முழுவதும் மழைநீர் தேங்கி கிடப்பதால் விஷ பாம்புகள் வீட்டுக்குள் புகும் நிலை உருவாகி உள்ளது. அதே போன்று சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் நிலை உள்ளது. 
இதனால் அந்த பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி அந்த பகுதி மக்கள் பாளையங்கோட்டை ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
17 வீடுகள் சேதம்
மன்னார் வளைகுடா பகுதியில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி இருப்பதால் நேற்று மீனவர்கள் கடலுக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனால் விசைப்படகுகள் தொடர்ந்து மீன்பிடி துறைமுகத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.
மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக இதுவரை 14 வீடுகள் பகுதியாகவும், 3 வீடுகள் முழுமையாகவும் சேதம் அடைந்து உள்ளன.
மழை அளவு விவரம்
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை பெய்த மழை அளவு (மில்லிமீட்டர்) விவரம் வருமாறு:-
திருசெந்தூர்- 30, காயல்பட்டினம்-48, குலசேகரன்பட்டினம்-56, விளாத்திகுளம்-24, காடல்குடி-10, வைப்பார்-16, சூரங்குடி-15, கோவில்பட்டி-10, கயத்தாறு-21, கடம்பூர்-33, ஓட்டப்பிடாரம்-32, மணியாச்சி-16, வேடநத்தம்-10, கீழஅரசடி-9, எட்டயபுரம்-11.3, சாத்தான்குளம்-25, ஸ்ரீவைகுண்டம்-42, தூத்துக்குடி-21.
தாம்போதி பாலம் மூழ்கியது
ஆறுமுகநேரி, ஆத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவில் விடிய விடிய கனமழை பெய்தது. இதனால் ஆத்தூர்- ஆறுமுகநேரி இடையே தண்ணீர் பந்தல் பகுதியில் உள்ள தரைமட்ட தாம்போதி பாலத்தை வெள்ளம் மூழ்கடித்து சென்றது.
அங்குள்ள வயல்களும் தண்ணீரில் மூழ்கின. தாம்போதி பாலத்தின் மீது சுமார் 2 அடி உயரத்துக்கு வெள்ளம் சென்றதால், அந்த வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
உதவி கலெக்டர் ஆய்வு
உடனே குரும்பூர் போலீசார், திருச்செந்தூர் தீயணைப்பு வீரர்கள் மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் விரைந்து சென்று, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து பாலத்தின் இருபுறமும் கயிறு கட்டி, வாகனங்கள் மெதுவாக இயக்கப்பட்டன. 
தூத்துக்குடி உதவி கலெக்டர் சரவணன், தாசில்தார் முருகேசன் மற்றும் அதிகாரிகள் தாம்போதி பாலத்தை பார்வையிட்டு வெள்ளத்தை வடிய வைக்க ஏற்பாடு செய்தார்.
மீட்பு குழுவினர் கண்காணிப்பு
அதன்படி வெள்ளநீர் கடலுக்கு செல்லும் வழியில் உள்ள அடைப்புகளை அகற்ற ஏற்பாடு செய்யப்பட்டது. சாகுபுரம் தொழிற்சாலைக்கு பின்புறம் உப்பளத்துக்கு செல்லும் வழியில் உள்ள பாலத்தின் கரையை உடைத்து வெள்ளநீரை அதிகளவில் வடிய வைத்தனர்.
எனினும் தொடர்ந்து மழை பெய்ததாலும், கடம்பாகுளத்தின் கீழ் பகுதியில் உள்ள குளங்களின் உபரிநீரானது தாம்போதி பாலத்துக்கு வந்ததாலும் தொடர்ந்து பாலத்தை மூழ்கடித்தவாறு வெள்ளம் ெசல்கிறது. அங்கு மீட்பு குழுவினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தரைப்பாலம் மூழ்கியது
தொடர் மழை காரணமாக குரும்பூரில் இருந்து சேதுக்குவாய்த்தான் வழியாக ஏரல் செல்லும் சாலையில் உள்ள தரைமட்ட பாலத்தை மூழ்கடித்தபடி வெள்ளம் சென்று கொண்டிருக்கிறது. இதனால் அங்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சில வாகனங்கள் மட்டும் ஆபத்தை உணராமல் சென்று வருகின்றன. அங்கு குரும்பூர் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். 
திருச்செந்தூர் சுற்றுவட்டார பகுதியில் நேற்று முன்தினம் தொடங்கிய மழை தொடர்ந்து நேற்று முழுவதும் பெய்தது. இதனால் திருச்செந்தூரில் உள்ள ரோடுகள், தெருக்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் குளம் போல் தேங்கி உள்ளது.
உடன்குடி
உடன்குடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலும் கடந்த 2 நாட்களாக இடி மின்னலுடன் விட்டுவிட்டு மழை பெய்தது. உடன்குடியில் திங்கட்கிழமை தோறும் செயல்படும் வாரச்சந்தை வளாகத்தில் நவீன மாடலில் கடைகளை கட்டப்போவதாக கூறி அனைத்து கடைகளையும் இடித்து அப்புறப்படுத்தி விட்டனர். இன்னும் புதிய கடைகள் கட்டும் பணி தொடங்கப்படவில்லை. இதனால் வியாபாரிகள் நேற்று பிளாஸ்டிக் பேப்பர்களை கூரை போல் கட்டி வியாபாரம் செய்தனர். பொதுமக்களும் மழையில் நனைந்துகொண்டே பொருட்களை வாங்கிச் சென்றனர்.

Next Story