பள்ளி மாணவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு
பழனியில் பள்ளிக்கு வந்த மாணவர்களை பூங்கொத்து கொடுத்து ஆசிரியர்கள் வரவேற்றனர்.
பழனி:
கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேற்று பள்ளி திறக்கப்பட்டது. முன்னதாக பள்ளி பகுதிகளில் தூய்மை பணி, கிருமிநாசினி தெளித்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டது. பழனி பகுதியில் நேற்று காலையில் மாணவர்கள் ஆர்வமுடன் பள்ளிக்கு வந்தனர்.
பல பள்ளிகளில் பெற்றோர் தங்கள் குழந்தைகளை வாகனங்களில் வந்து விட்டு சென்றனர். அவ்வாறு பள்ளிகளுக்கு வந்த மாணவர்களை மேளதாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. சில பள்ளிகளில் கை தட்டியும், பூங்கொத்து கொடுத்தும், ஆடி, பாடியும், இனிப்பு கொடுத்தும் அவர்களை வகுப்பறைக்கு ஆசிரியர்கள் அழைத்து சென்றனர்.
தொடர்ந்து மாணவர்களுக்கு கொரோனா கட்டுப்பாட்டு விதிகளான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைபிடித்தல் உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் பஸ்களில் வரும் மாணவர்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து வர அறிவுறுத்தப்பட்டது. பல நாட்களாக தங்கள் நண்பர்களை காணாது இருந்த மாணவர்கள், நேற்று பள்ளிக்கூடத்துக்கு வந்ததும் அவர்களுடன் உரையாடி மகிழ்ந்தனர்.
Related Tags :
Next Story