திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளைமறுநாள் தொடங்குகிறது


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளைமறுநாள் தொடங்குகிறது
x
தினத்தந்தி 1 Nov 2021 7:43 PM IST (Updated: 1 Nov 2021 7:43 PM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளைமறுநாள் தொடங்குகிறது

திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை மறுநாள் (வியாழக்கிழமை) தொடங்குகிறது. விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கந்தசஷ்டி திருவிழா
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டு தோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறும். அதில் முக்கிய திருவிழாவான கந்தசஷ்டி திருவிழா நாளை மறுநாள் (வியாழக்கிழமை) தொடங்குகிறது. அன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது. காலை 7.35 மணிக்கு யாகசாலை பூஜையுடன் கந்தசஷ்டி திருவிழா தொடங்குகிறது. காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், பகல் 12 மணிக்கு யாகசாலையில் சுவாமிக்கு தீபாராதனை நடக்கிறது. பின்னர் மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.
2-ம் திருநாள் முதல் 5-ம் திருநாள் வரை அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், தொடர்ந்து தீபாராதனை, மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெறும்.
சூரசம்ஹாரம்
6-ம் திருநாள் 9-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 9 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. மதியம் 1 மணிக்கு மாலை சாயரட்சை தீபாராதனை நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு மேல் சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்கு எழுந்தருள்கிறார். பின்னர் கோவில் வளாகத்தில் சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறுகிறது.
திருக்கல்யாணம்
7-ம் திருநாள் 10-ந் தேதி (புதன்கிழமை) அதிகாலை 3 மணிக்கு நடைதிறப்பு, 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது. 9 மணிக்கு சுவாமிக்கு உச்சிகால அபிஷேகம், மதியம் 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது. மாலை 6 மணிக்கு அம்பாளுக்கு சுவாமி காட்சி கொடுத்து, மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு சுவாமிக்கும், தெய்வானை அம்பாளுக்கு திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சி நடக்கிறது.
தற்காலிக கொட்டைகைகள்
கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் வசதி கருதி கோவில் கலையரங்கம் அருகில் தற்காலிக கொட்டகைகள் அமைக்கப்பட்டு வருகிறது.
கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக திருவிழா காலங்களில் 1-ம் திருநாள் முதல் 5-ம் திருநாள் வரை தினசரி காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். அதில் தினசரி 5 ஆயிரம் பேர் ஆன்லைன் மூலமாகவும், 5 ஆயிரம் பேர் நேரடியாகவும் என மொத்தம் 10 ஆயிரம் பக்தர்கள் மட்டும் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
அனுமதி இல்லை
அதேபோல் சூரசம்ஹாரம், திருக்கல்யாணம் நடைபெறும் 9 மற்றும் 10-ந்தேதிகளில் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்யவோ, நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கோ அனுமதி இல்லை.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் (பொறுப்பு) குமரதுரை மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.


Next Story