பொதுப்பணித்துறை அலுவலகத்தில் திரண்ட விவசாயிகள்
பழனியில் உள்ள வரதமாநதியில் இருந்து குளங்களுக்கு தண்ணீர் திறக்கக்கோரி பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு விவசாயிகள் திரண்டனர்.
பழனி:
பழனியை அடுத்த ஆயக்குடி, கலிக்கநாயக்கன்பட்டி, பொன்னாபுரம், கருப்பணகவுண்டன்வலசு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பழனி திருநகரில் உள்ள பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அலுவலகத்துக்கு நேற்று திரண்டு வந்தனர். பின்னர் தங்கள் பகுதியில் உள்ள குளங்களுக்கு முறையாக தண்ணீர் திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்ய முயன்றனர்.
இதற்கிடையே பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கோபி, உதவி பொறியாளர் கண்ணன் ஆகியோர் விவசாயிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குளங்களுக்கு தண்ணீர் திறக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனையடுத்து விவசாயிகள் கோரிக்கை மனுவை அதிகாரிகளிடம் கொடுத்து விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், வரதமாநதி அணை நிரம்பி கால்வாய்கள் வழியாக தண்ணீர் செல்கிறது. அந்த தண்ணீரால் வையாபுரிக்குளம், சிறுநாயக்கன்குளம் ஆகியவை நிரம்பிவிட்டன. ஆனால் கடைமடை பகுதியில் உள்ள வீரக்குளம், குமரநாயக்கன்குளம், தேவநாயக்கன்குளம், மாப்பிள்ளை நாயக்கன்குளம், கலிக்கநாயக்கன்குளம் ஆகியவற்றுக்கு தண்ணீர் திறக்கவில்லை. இதனால் பயிர் சாகுபடி செய்ய முடியாமல் தவித்து வருகிறோம் என்றனர். தண்ணீர் திறக்கக்கோரி பொதுப்பணித்துறை அலுவலகத்தில் விவசாயிகள் திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story