தனபாலுக்கு மேலும் 5 நாள் போலீஸ் காவல்


தனபாலுக்கு மேலும் 5 நாள் போலீஸ் காவல்
x
தினத்தந்தி 1 Nov 2021 7:58 PM IST (Updated: 1 Nov 2021 7:58 PM IST)
t-max-icont-min-icon

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கைதான தனபாலை மேலும் 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு ஊட்டி கோர்ட்டு அனுமதி வழங்கி உத்தரவிட்டது.

ஊட்டி

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கைதான தனபாலை மேலும் 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு ஊட்டி கோர்ட்டு அனுமதி வழங்கி உத்தரவிட்டது.

கோடநாடு வழக்கு

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் 24.4.2017 அன்று காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். மேலும் எஸ்டேட் பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது. இதுதொடர்பாக கேரளாவை சேர்ந்த சயான், மனோஜ், திபு, சதீசன், சம்சீர் அலி, பிஜின், சந்தோஷ் சாமி, மனோஜ்சாமி, ஜித்தின்ஜாய், உதயகுமார் ஆகிய 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ஊட்டி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

கோடநாடு சம்பவம் நடந்த சில நாட்களில் விபத்தில் கனகராஜ் (ஜெயலலிதா கார் டிரைவர்) இறந்தது, கோடநாடு எஸ்டேட்டில் கணினி ஆபரேட்டர் தற்கொலை செய்தது ஆகிய 2 சம்பவங்கள் யதார்த்தமாக நடந்ததா அல்லது ஒன்றுக்கொன்று தொடர்புடையதா என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். மேலும் முழு விசாரணை நடத்தி உண்மைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வர 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

தகவல் பரிமாற்றங்கள் அழிப்பு

இதற்கிடையில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தடயங்களை அழித்ததாக கனகராஜின் அண்ணன் தனபால், நெருங்கிய உறவினர் ரமேஷ் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். கூடலூர் கிளை சிறையில் அடைக்கப்பட்ட அவர்களை தனித்தனியாக சோலூர்மட்டம் போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டனர்.

அதன்படி கடந்த 28-ந் தேதி தனபால், 29-ந் தேதி ரமேஷை தலா 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு ஊட்டி கோர்ட்டு அனுமதி வழங்கியது. அவர்களை ரகசிய இடத்தில் வைத்து பல்வேறு கேள்விகளை கேட்டு முக்கிய தகவல்களை போலீசார் பதிவு செய்தனர். கனகராஜின் செல்போனில் நடந்த தகவல் பரிமாற்றங்களை அழித்தது குறித்து சேலம், கோவைக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி முக்கிய தகவல்களை திரட்டுகின்றனர். 

மேலும் 5 நாள் காவல்

இந்த நிலையில் தனபாலுக்கு 5 நாள் போலீஸ் காவல் முடிவடைந்ததால், அவரை நேற்று மாலை ஊட்டி மகளிர் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். காவல்துறை தரப்பில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணமூர்த்தி, குன்னூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் ஆகியோர் ஆஜராகினர். மேலும் தனபாலிடம் விசாரிக்க மேலும் 7 நாள் அனுமதி வழங்க வேண்டும் என்று நீதிபதியிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து தனபாலை மேலும் 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு அனுமதி வழங்கி நீதிபதி ஸ்ரீதரன் உத்தரவிட்டார். பின்னர் போலீசார் தனபாலை வாகனத்தில் அழைத்துச்சென்றனர். இன்று (செவ்வாய்க்கிழமை) 5 நாள் காவல் முடிவடையும் ரமேசை போலீசார் ஊட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர். மேலும் அவர்கள் 2 பேருக்கும் ஜாமீன் வழங்க கோரிய மனுவும் விசாரணைக்கு வருகிறது.


Next Story