1 முதல் 8-ம் வகுப்பு வரை 19 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு மாணவர்களை பூக்கள், இனிப்புடன் வரவேற்ற கலெக்டர்
1 முதல் 8-ம் வகுப்பு வரை 19 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டன. தேனி அருகே அரசு பள்ளி மாணவர்களை பூக்கள், இனிப்பு வழங்கி கலெக்டர் வரவேற்றார்.
தேனி:
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியதால் 1 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. மேலும் 19 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவ, மாணவிகளை உற்சாகமாக வரவேற்க அரசு உத்தரவிட்டது.
அதன்படி தேனி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு வந்த மாணவ, மாணவிகளுக்கு நேற்று உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தேனி மாவட்டத்தில் 541 தொடக்கப்பள்ளிகள், 176 நடுநிலைப்பள்ளிகள், 71 உயர்நிலைப்பள்ளிகள், 149 மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 940 பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளின் நுழைவு வாயிலில் ஆசிரியர்கள் நின்று கொண்டு மாணவ, மாணவிகளை வரவேற்றனர்.
கலெக்டர் வரவேற்பு
தேனி அருகே உப்பார்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளை வரவேற்பதற்காக மாவட்ட கலெக்டர் முரளிதரன் பள்ளி வளாகத்துக்கு வந்தார். பள்ளியின் நுழைவு வாயிலில் அவர் நின்றுகொண்டு, மாணவ, மாணவிகளுக்கு ரோஜா பூ, முக கவசம், இனிப்பு ஆகியவற்றை வழங்கி வரவேற்றார். பின்னர் வகுப்பறைக்கு சென்று மாணவ, மாணவிகளுக்கு பூக்கள் மற்றும் இனிப்பு வழங்கி அவர்களை உற்சாகப்படுத்தினார்.
தேனி நாடார் சரசுவதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் தலைமையிலும், நாடார் சரசுவதி தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியை காஞ்சனாதேவி தலைமையிலும் மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு, சந்தனம், குங்குமம் வழங்கி வரவேற்பு அளிக்கப்பட்டது.
பாடல், நடனம்
அதுபோல் அனைத்து பள்ளிகளிலும் பள்ளி தலைமை ஆசிரியர்கள், பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள் மாணவ, மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பெற்றோர்கள் பள்ளி நுழைவு வாயில் வரை வந்து தங்களின் குழந்தைகளை பள்ளிக்கு வழியனுப்பி வைத்தனர். சில குழந்தைகள் பள்ளிக்குள் அழுது கொண்டே வந்தன. அந்த குழந்தைகளை ஆசிரியர்கள் இனிப்பு வழங்கி சமாதானம் செய்தனர். சில குழந்தைகள் வகுப்பறையிலும் அழுது கொண்டே இருந்தன. இதனால் பாடல், நடனம் மூலம் தொடக்கப்பள்ளி குழந்தைகளை ஆசிரியர்கள் மகிழ்வித்தனர்.
இதனிடையே பள்ளிகளில் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா? என கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
உப்புக்கோட்டை
உப்புக்கோட்டையில் உள்ள பச்சையப்பா உயர்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு மாலை அணிவித்து தலையில் பரிவட்டம் கட்டி மேளதாளங்கள் முழங்க பூக்கள், இனிப்பு கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் தலைமையாசிரியர் புவனேஸ்வரி மற்றும் ஆசிரியர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
கம்பம்
கம்பம் அருகேயுள்ள மஞ்சள்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு வட்டார கல்வி அலுவலர் நாராயணசாமி தலைமை தாங்கினார், பள்ளிதலைமை ஆசிரியர் பாலமீனா, ஆசிரியர் சிவாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளிக்கு வந்த 18 மாணவ, மாணவிகளுக்கு மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டனர். பின்னர் அவர்களை ஊக்குவிக்கும் விதமாக டிபன் பாக்ஸ், ரெயின்கோர்ட்டு, இனிப்பு வழங்கப்பட்டது.
கெங்குவார்பட்டி
தேவதானப்பட்டி அருகே சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் மோகன் தலைமையில் மாணவர்களுக்கு மேளதாளத்துடன் அட்சதை தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது. பள்ளி திறந்தவுடன் முதலில் வருகை தந்த 5-ம் வகுப்பு மாணவி சத்தியபிரியா தேசியக்கொடி ஏற்றி கவுரவிக்கப்பட்டார்.
கெங்குவார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி தலைமையாசிரியர் ராம் தியாகராஜ் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் ஸ்டாலின் ஆகியோர் தலைமையில் மாணவர்களுக்கு மேளதாளத்துடன் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
Related Tags :
Next Story