வீடூர் அணையின் நீர்மட்டம் 26 அடியாக உயர்வு


வீடூர் அணையின் நீர்மட்டம் 26 அடியாக உயர்வு
x
தினத்தந்தி 1 Nov 2021 8:28 PM IST (Updated: 1 Nov 2021 8:28 PM IST)
t-max-icont-min-icon

நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்த வருவதால் வீடூர் அணையின் நீர்மட்டம் 26.5 அடியாக உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

விக்கிரவாண்டி, 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாளில் இருந்து விழுப்புரம் மாவட்டம் முழுவதும் பரவலாக மழைபெய்து வருகிறது. இதனால் ஏரி, குளங்களுக்கு தண்ணீர் வரத்தொடங்கி உள்ளது. அந்த வகையில் திண்டிவனம் தாலுகாவில் உள்ள வீடூர் அணைக்கும் தண்ணீர் வருகிறது. அதாவது அணையின் நீர்பிடிப்பு பகுதியான செஞ்சி, மேல்மலையனுார் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சங்கராபரணி ஆறு வழியாக நேற்று வினாடிக்கு 292 கன அடி நீர் வருகிறது. 

நீர்மட்டம் உயர்வு 

இதனால் வீடூர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்துள்ளது. அதாவது மொத்த கொள்ளளவான 32 அடியில் நேற்று 26.5 அடியாக உயர்ந்தது. தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டு இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதை பொதுப்பணித்துறை உதவி பொறியாளர்கள் அய்யப்பன், சண்முகம் ஆகியோர் கண்காணித்து வருகின்றனர். கடல் போல் காட்சி அளிக்கும் வீடூர் அணையில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் குளிப்பதை தடுக்க விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமுருகன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பரணிநாதன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வீடூர் அணை மூலம் தமிழகத்தில் 2200 ஏக்கரும், புதுச்சேரி மாநிலத்தில் 1000 ஏக்கர் விவசாய நிலமும் பாசன வசதி பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story