விழுப்புரம் கோர்ட்டில் சிறப்பு டி.ஜி.பி. ஆஜர்


விழுப்புரம் கோர்ட்டில் சிறப்பு டி.ஜி.பி. ஆஜர்
x
தினத்தந்தி 1 Nov 2021 8:35 PM IST (Updated: 1 Nov 2021 8:35 PM IST)
t-max-icont-min-icon

பெண் ஐ.பி.எஸ். அதிகாரி தொடர்ந்த பாலியல் வழக்கில் விழுப்புரம் கோர்ட்டில் சிறப்பு டி.ஜி.பி., முன்னாள் எஸ்.பி. ஆஜராகினர். அப்போது சிறப்பு டி.ஜி.பி. தரப்பு கேட்கும் ஆவணங்களை வழங்க சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

விழுப்புரம், 

பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு சிறப்பு டி.ஜி.பி. பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிறப்பு டி.ஜி.பி., செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு ஆகிய இருவரும் ஆஜராகினர். 
விசாரணையின்போது சிறப்பு டி.ஜி.பி. தரப்பில் ஆஜரான வக்கீல் ரவீந்திரன், இவ்வழக்கு தொடர்பான 1,400 பக்கங்கள் கொண்ட 127 ஆவணங்களில் எங்களுக்கு அரசு தரப்பில் 123 ஆவணங்களைத்தான் கொடுத்துள்ளனர், பரனூர் சுங்கச்சாவடியில் எடுக்கப்பட்ட சி.சி.டி.வி. பதிவு காட்சிகள், வாட்ஸ்-அப் குறுந்தகவல் உள்ளிட்ட 19 ஆவணங்கள் தொடர்பாக வழங்கப்பட்ட 3 சி.டி.க்களும் ஓபன் ஆகவில்லை, முறையாக ஆவணங்களை வழங்கவில்லை என்றும், வாக்குமூலங்கள் தொடர்பான சில ஆவணங்களும் விட்டுப்போயுள்ளது.

ஒருதலைபட்சமாக விசாரணை 

சிறப்பு டி.ஜி.பி.யின் வாக்குமூலங்களும் கொண்டு வரப்படவில்லை. சி.பி.சி.ஐ.டி. போலீசார் முறையாக புலன் விசாரணை நடத்தவில்லை. தேவையில்லாத மற்றும் வழக்கில் சம்பந்தமில்லாத ஆவணங்களை சேர்த்து ஒருதலைபட்சமாக விசாரணை நடத்தியுள்ளதாகவும் குற்றம்சாட்டினார். அதோடு சிறப்பு டி.ஜி.பி.யின் டிரைவரிடம் ஏன் வாக்குமூலம் வாங்கவில்லை. டி.ஜி.பி. பட்டியலில் உள்ளதால் அவரது பதவி உயர்வை தடுக்கும் வகையில் வழக்கு ஜோடிக்கப்பட்டுள்ளது என்றும், சிறப்பு டி.ஜி.பி. தனிப்பட்ட முறையில் பெண் போலீஸ் அதிகாரிக்கு செல்போனில் ஏதேனும் குறுந்தகவல், உரையாடல் அல்லது புகைப்படம் ஏதேனும் அனுப்பியுள்ளாரா என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் சம்பவம் நடந்ததாக கூறப்படும் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அருகில் காரில் இருந்து புகார்தாரரான பெண் போலீஸ் அதிகாரி இறங்கும்போது அப்பகுதியில் 3 ஐ.ஜி.க்கள், 3 டி.ஐ.ஜி.க்கள் பணியில் இருந்துள்ளனர், அவர்களிடம் உடனடியாக ஏன் புகார் தெரிவிக்கவில்லை.

புகாரில் உண்மை தன்மை இல்லை 

அதுமட்டுமின்றி கள்ளக்குறிச்சி போலீஸ் சூப்பிரண்டு, அந்த பெண் போலீஸ் அதிகாரியை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியபோது அவர் பாதுகாப்பு பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருப்பதாக கூறியுள்ளார், அப்போது கூட கள்ளக்குறிச்சி போலீஸ் சூப்பிரண்டிடம் அந்த பெண் போலீஸ் அதிகாரி புகார் தெரிவிக்கவில்லையே ஏன்? சம்பவம் நடந்ததாக கூறப்படும் நாளில் இருந்து சில நாட்கள் கழித்துதான் அந்த பெண் போலீஸ் அதிகாரி புகார் கூறியிருக்கிறார். இந்த புகாரில் உண்மை தன்மை இல்லை, அதுபோன்ற குற்ற சம்பவம் நடந்திருக்க வாய்ப்பில்லை என்று வாதாடினார்.

ஆவணங்களை வழங்க உத்தரவு

உடனே அரசு தரப்பு வக்கீல் குறுக்கிட்டு அதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்ததோடு, இவ்வழக்கில் கூடுதல் சட்டப்பிரிவை 354 (டி) (பெண்ணை மானபங்கப்படுத்த முயற்சி செய்ததாக) சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அதற்கு குறுக்கிட்டு பேசிய சிறப்பு டி.ஜி.பி. தரப்பு வக்கீல், இவ்வழக்கு தொடர்பாக தடயவியல் அறிக்கை, சி.சி.டி.வி. காட்சிகள், விடுபட்ட ஆவணங்களை அரசு தரப்பில் எங்களுக்கு பென்டிரைவ் மூலம் வழங்கும்படி வாதிட்டார். அதற்கு அரசு தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி கோபிநாதன், இவ்வழக்கு தொடர்பாக சிறப்பு டி.ஜி.பி. தரப்பு, ஆவணங்களை கேட்பதில் தவறில்லை, அவர்கள் கேட்ட ஆவணங்களை நாளைக்குள் (இன்று) வழங்கும்படி சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு உத்தரவிட்டார். மேலும் இவ்வழக்கு விசாரணை மீண்டும் நாளை (அதாவது இன்று) நடைபெறும் எனவும் நீதிபதி கோபிநாதன் கூறினார்.

Next Story